சந்தையில் மீண்டும் அரிசித் தட்டுப்பாடு
இலங்கை
சந்தையில் மீண்டும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசிக்கு பற்றாக்குறை நிலவுவதனால், அவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலையை நீக்குமாறு அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 9ஆம் திகதி அரிசி பற்றாக்குறை காரணமாக உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டது. இதன்படி, சம்பா அரிசிக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.240, கீரி சம்பா அரிசிக்கு ரூ.260 என விலை நிர்ணயிக்கப்பட்டது.
எனினும், மொத்தவிற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் தற்போது சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் அதிக விலைக்கு அரிசி வழங்குவதால், நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனை செய்வது கடினமாகி வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், சிறு மற்றும் நடுத்தர அளவிலான நெல் தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கம், செயற்கையாக அரிசி பற்றாக்குறை உருவாக்கி இலாபம் ஈட்டும் பாரிய தொழிற்சாலை உரிமையாளர்களின் முயற்சியை கண்டித்து, அதிகபட்ச சில்லறை விலையை நீக்க வேண்டாம் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொட தெரிவித்துள்ளார்:
“அரசாங்கம் பொறுப்பேற்று ஓராண்டாகியும், விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கவில்லை. நுகர்வோரின் சிக்கலை தீர்க்க வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் பாரிய தொழிற்சாலை உரிமையாளர்கள் மட்டுமே மகிழ்ச்சியாக உள்ளனர். விவசாயிகளின் பிரச்சினையை முன்வைத்தவர்கள் ஆட்சிக்கு வந்ததும் அதை மறந்துவிட்டனர்” என அவர் கூறினார்.






















