• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தியாக தீபம் திலீபனின் 38வது நினைவு தினம் அனுஷ்டிப்பு

இலங்கை

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 38வது நினைவு தின நிகழ்வுகள் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானதுடன் வடக்கின் பல பகுதிகளிலும் அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் தியாகி தீலிபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த நேரம் காலை 9.45 மணியளவில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமானது.

மாவீரர்களின் பெற்றோரால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து, மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும், முல்லைத்தீவு – கள்ளப்பாடு பகுதியில் அமைந்துள்ள வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களது மக்கள் தொடர்பகத்தில் தியாகதீபம் திலீபனின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

குறிப்பாக தியாகதீபம் திலீபனின் திருஉருவப்படத்திற்கு மலர்தூவி, சுடரேற்றப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டன.

அந்தவகையில் மாவீரர் ஒருவரின் தாயாரான செ.தவராணி ஈகைச்சுடரினை ஏற்றி குறித்த நினைவேந்தலை ஆரம்பித்துவைத்தார்.

இந்த அஞ்சலி நிகழ்வுகளில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கலந்துகொண்டதுடன், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தியாகதீபம் திலீபனின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழரசு கட்சியின் அலுவலகத்திலும் இன்று இடம்பெற்றது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் கலந்துகொண்டு அஞ்சலியை செலுத்தினார்.

இதனை அடுத்து பிரதேச சபை உறுப்பினர்கள், தவிசாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு தமது அஞ்சலியை செலுத்தினர்.
 

Leave a Reply