ஸ்பெயின் மதுபான விடுதியில் வெடி விபத்து - 25 பேர் காயம்
ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் அமைந்துள்ள ஒரு மதுபான விடுதியில் சனிக்கிழமை (13) ஏற்பட்ட வெடி விபத்தில் 25 பேர் காயமடைந்தனர்.
அவர்களில் மூன்று பேர் படுகாயமடைந்தனர் என்று ஸ்பெயின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாட்ரிட்டின் தென்-மத்திய மாவட்டமான வல்லேகாஸில் சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு (0100 GMT) வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததாக அந் நாட்டு அவசர சேவைகள் தெரிவித்தன.
வெடி விபத்தை அடுத்து தீயணைப்பு வாகனங்கள், அம்பியூலன்ஸ்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் விரைந்து மீட்பு பணிகளை முன்னெடுத்தனர்.
எரிவாயு சிலிண்டர் கசிவு காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டிருக்கலாம் என்று ஸ்பானிஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மீட்புப் பணிகளுக்கு உதவ மோப்ப நாய்கள் மற்றும் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இடிபாடுகளுக்குள் எவரும் சிக்கியிருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.
வெடி விபத்துக்கான உண்மையான காரணத்தை கண்டறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.























