போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு தியாகி அந்தஸ்து - இழப்பீடு அறிவித்த நேபாள் பிரதமர் சுசிலா கார்கி
ஊழல் குற்றச்சாட்டுகள், அரசியல் தலைவர்களுடைய வாரிசுகளின் ஆடம்பர வாழ்க்கை ஆகியவை நேபாளத்தில் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தன.
இதற்கிடையே அண்மையில் சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட அந்நாட்டு ஜென் z இளைஞர்களை மேலும் கோபப்படுத்தியது. இதனால் கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி போராட்டம் வெடித்தது.
இளைஞர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் போராட்டம் கலவரமாக மாறியது. 19 பேர் உயிரிழந்தனர்.
இதைத்தொடர்ந்து செப்டம்பர் 9 அன்று சமூக வலைத்தளங்களுக்கு தடை நீக்கப்பட்டது. ஆனால் பிரதமர் பதவி விலக வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரினர். எனவே அன்றைய தினமே பிரதமர் சர்மா ஒலி பதவி விலகினார்.
ஒட்டுமொத்தமாக கலவரத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 72 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. 159 போராட்டக்காரர்கள், 10 கைதிகள், 3 போலீஸ் அதிகாரிகள் இதில் அடங்குவர்.
தொடர்ந்து நாட்டில் இடைக்கால அரசு அமைப்பதற்கான பணிகள் தொடங்கின. இதற்காக ஜனாதிபதி ராமச்சந்திர பவுடெல் மற்றும் ராணுவ தளபதி அசோக் ராஜ் சிக்டெல்லுடன் போராட்டக்காரர்களின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதற்கிடையில் கடந்த வெள்ளிக்கிழமை, இடைக்கால பிரதமராக அந்நாட்டு உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கி (73) பதவியேற்றார்.
நீதிபதியாக இருந்தபோது ஊழலுக்கு எதிராக பல உத்தரவுகளை பிறப்பித்த சுசிலாவுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில் 2 நாட்கள் கழித்து இன்று, இடைக்கால பிரதமராக சுசிலா கார்கி அதிகாரபூர்வமாக கடமைகளை தொடங்கினார்.
முதலாவதாக போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட 19 பேருக்கு தியாகி அந்தஸ்தும், அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும் அறிவித்துள்ளார்.
முன்னதாக லாய்ன்சவுரில் அமைக்கப்பட்டிருந்த தியாகிகள் நினைவிடத்தில் அவர் அஞ்சலி செலுத்தி விட்டு உள்துறை அமைச்சக கட்டிட அலுவலத்தில் தனது பிரதமர் கடமைகளை தொடங்கிய பின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
பிரதமர் அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்ட நிலையில் உள்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் அலுவலகம் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே கலவரத்தில் காயமடைந்த 134 போராட்டக்காரர்களுக்கும், 57 காவல்துறையினருக்குமான மருத்துவ செலவுகளை அரசு ஏற்றுள்ளது.






















