• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சார்லி கிரிக்கை சுட்டுக்கொலை செய்த 22 வயது வாலிபர் கைது - டிரம்ப் தகவல்

அமெரிக்காவில் அதிபர் டிரம்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க் பல்கலைக்கழக நிகழ்ச்சியின்போது சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிலையில் போலீசார் சந்தேகத்திற்குரிய நபரை கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவின் உட்டா மாகாணத்தைச் சேர்ந்த பழமைவாத தலைவர் சார்லி கிர்க் (வயது 31). ஜனாதிபதி டிரம்பின் தீவிர ஆதரவாளரான இவர் கடந்த 2012-ம் ஆண்டு டி.பி.யு.எஸ்.ஏ. என்ற மாணவர் அமைப்பை நிறுவினார். கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் டிரம்பின் வெற்றிக்கு இந்த அமைப்பு முக்கிய பங்கு வகித்தது.

இதன்மூலம் தாராளவாத கொள்கை கொண்ட கல்லூரிகளில் பழமைவாத கொள்கைகளை பரப்பி வந்தார். இதற்காக பல கல்லூரிகளில் அவர் திறந்தவெளி விவாதம் நடத்துவது வழக்கம்.

அந்தவகையில் உட்டா மாகாண பல்கலைக்கழகத்தில் திறந்தவெளி விவாதத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் சுமார் 3 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களிடையே கலந்துரையாடிய சார்லி மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது கழுத்தில் திடீரென குண்டு பாய்ந்தது. இதனால் அவர் சுருண்டு கீழே விழுந்தார்.

பாதுகாவலர்கள் அவரை மீட்டு உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

முதல்கட்ட விசாரணையில், பல்கலைக்கழக வளாகத்தின் ஒரு மாடியில் இருந்து துப்பாக்கிச்சூடு நடத்தியது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பான சந்தேகத்தின்பேரில் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். ஆனால் அவர் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை என தெரிந்த பிறகு விடுவிக்கப்பட்டார். எனவே உண்மையான குற்றவாளியை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

இந்த நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரை போலீசார் கைது செய்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரின் நெருக்கமானவரின் தகவலின்படி கைது செய்யப்பட்டுள்ளார். அவர்தான் துப்பாக்கிச்சூடு நடத்தினார் என்பதற்கான உயர்ந்த அளவிலான உறுதிப்பாடு இருப்பதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

குற்றவாளிக்கு அதிகபட்சமாக மரண தண்டனை வழங்க வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தியிருந்தார். குற்றவாளிக்கு 22 வயது இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே சார்லி கிர்க் கொலை செய்யப்பட்டதற்கு அதிபர் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக வெள்ளை மாளிகையில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

அதேபோல் இங்கிலாந்து, இத்தாலி, அர்ஜென்டினா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 

Leave a Reply