கண்டல் காட்டுப் பகுதியில் 10 இடங்களில் சட்டவிரோதமாக சேகரித்து வைக்கப்பட்டிருந்த மணல் கண்டுபிடிப்பு
இலங்கை
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டல் காட்டுப் பகுதியில் 10 இடங்களில் சட்டவிரோதமாக சேகரித்து வைக்கப்பட்டிருந்த மணல் கைப்பற்றப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றையதினம் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின்போது இந்த சட்டவிரோத மணல் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
மகாவலி ஆற்றில் இருந்து குறித்த மணல் சட்டவிரோதமாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவை கண்டல் காட்டுப் பகுதிக்குள் பத்து இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்தாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
தமக்கு கிடைத்திருந்த இரகசிய தகவலுக்கு அமைவாக இந்த மணல் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் கண்டல் காட்டுப் பகுதிக்கு புவியியல் மற்றும் சுரங்கப் பணியக அதிகாரிகள், வரவழைக்கப்பட்டு, கைப்பற்றப்பட்ட மணலின் அளவுகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






















