மலையக அதிகார சபை தொடர்ந்து இயங்கும்
இலங்கை
மலையக மக்கள் அபிவிருத்திக்காக 2018ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மலையக அதிகார சபை (பெருந்தோட்ட பிராந்திய புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை) மூடப்படாது என அமைச்சர் சமந்த வித்யாரத்ன உறுதியளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மலையக மக்கள் கல்வி, வீடு, சுகாதாரம், சமூக மேம்பாடு, வருமானம் உள்ளிட்ட துறைகளில் பின்தங்கியுள்ள நிலையில், அவர்களுக்கான ஒருங்கிணைந்த அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்டு, 2018ஆம் ஆண்டு 32ஆம் இலக்கச் சட்டத்தின் கீழ் இந்த அதிகார சபை நிறுவப்பட்டது.
அதேவேளை, தற்போதைய அரசாங்கம் ஒரே பணிகளைச் செய்கின்ற ஒன்றுக்கு மேற்பட்ட அரச நிறுவனங்களை அடையாளம் கண்டு மூடுவதற்கான முடிவை எடுத்த நிலையில்,33 அரச நிறுவனங்கள் அதில் அடங்குகின்றமை தெரிய வந்தது. மலையக அதிகார சபையும் அந்த பட்டியலில் சேர்க்கப்பட்டது. இதன்படி, அதன் பணிகள் ஒரு அமைச்சின் பிரிவிற்கு மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த முடிவைத் தன்னிச்சையாக மலையக மக்களின் உரிமைகளை பாதிக்கும் நடவடிக்கை என கண்டித்து, மனோ கணேசன் எம்.பி., ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களுக்கு எதிர்ப்பு கடிதம் அனுப்பியிருந்தார்.
இந்நிலையில், இன்று புதன்கிழமை (செப்டம்பர் 11) நாடாளுமன்றத்தில் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தன்னுடன் நேரில் சந்தித்து, “மலையக அதிகார சபையை மூடமாட்டோம்; அதனைத் தொடர்வோம்” என தனிப்பட்ட உறுதியொன்று வழங்கியதாக மனோ கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ முடிவு வெளியாகும் வரை அமைதியாக காத்திருப்பது தான் தங்களது நிலைப்பாடு எனவும், மலையக மக்களின் நலனுக்காக இந்த அமைப்பு தொடர வேண்டியது அவசியம் எனவும் மனோ கணேசன் எம்.பி. வலியுறுத்தினார்.























