வெற்றி மாறன் தயாரித்த Bad Girl படத்தின் திரைவிமர்சனம்
சினிமா
படத்தில் நாயகியாக நடித்திருக்கும் அஞ்சலி சிவராமன் சிறப்பான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.
கதைக்களம்
பள்ளியில் படித்து வரும் நாயகி அஞ்சலி சிவராமனுக்கு படிப்பு சரியாக வரவில்லை. தன் பள்ளியில் படிக்கும் ஹிருது ஹாரூனை காதலிக்க ஆரம்பிக்கிறார். ஒரு கட்டத்தில் இவர்களின் காதல் அதே பள்ளியில் ஆசிரியராக இருக்கும் அஞ்சலியின் தாய் சாந்தி பிரியாவுக்கு தெரியவருகிறது. பிறகு பள்ளிக்கே தெரிந்து காதலுக்கு முட்டுக்கட்டை போட்டு இருவரும் பிரிகிறார்கள்.
அஞ்சலியை வேறொரு பள்ளியில் சேர்க்கிறார்கள். அதன்பிறகு நான் என் விருப்பம்படி வாழப்போகிறேன் என்று சொல்லி விடுதியில் தங்கி படிக்க ஆரம்பிக்கிறாள். பள்ளி படிப்பை முடித்து கல்லூரியில் சீனியர் ஒருவரை காதலிக்க ஆரம்பிக்கிறார். அவர் கல்லூரி படிப்பை முடித்து விட்டு அஞ்சலியை ஏமாற்றி விடுகிறார். அதன் பிறகு வேலைக்கு செல்லும் போது டிஜே உடன் லிவ்விங் வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். திடீரென்று இருவரும் பிரிகிறார்கள்.
இதையும் படியுங்கள்: 'லோகா' படத்தின் லாபத்தை படக்குழுவினருடன் பகிர்ந்து கொள்வேன் - துல்கர் சல்மான் நெகிழ்ச்சி
இறுதியில் நாயகி அஞ்சலியின் வாழ்க்கை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகியாக நடித்திருக்கும் அஞ்சலி சிவராமன் சிறப்பான நடிப்பை கொடுத்து இருக்கிறார். பள்ளி, கல்லூரி, வேலை என அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ப நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். காதல், கோபம், சோகம் என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். ஹிருது ஹாரூன், டிஜே ஆகியோர் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.
இயக்கம்
சுதந்திரமாக வாழ நினைக்கும் பெண்ணின் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் வர்ஷா. ஒரு பெண்ணுக்கு காதல், மோதல், பிரிவு, வலி இதெல்லாம் வரும், போகும் நாம் அடுத்தக்கட்டத்திற்கு நகந்துக்கொண்டே இருக்க வேண்டும், நமக்காக காலம் நிற்காது என்பதே சொல்லி இருக்கிறார். திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். படம் பார்க்கும் போது, பெண்ணின் ஆட்டோகிராப் வெர்ஷன் போல் இருக்கிறது. இந்த கதை குறிப்பிட்ட ஒரு சிலருக்கு மட்டுமே பிடிக்கும். அனைத்து தர ரசிகர்களும் பிடிப்பதில் சந்தேகமே.
இசை
அமித் திரிவேதி இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சிறப்பு.
ஒளிப்பதிவு
ப்ரீத்தா ஜெயராமன், ஜெகதீஷ் ரவி, இளவரசர் ஆண்டர்சன் ஆகியோரின் ஒளிப்பதிவு ரசிக்கும்படி அமைந்துள்ளது.
தயாரிப்பு
கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
ரேட்டிங்: 2/5























