எல்ல – வெல்லவாய பேருந்து விபத்து- வெளிவந்த உண்மைகள்
இலங்கை
எல்ல – வெல்லவாய பகுதியில் விபத்துக்குள்ளான பேருந்தானது, கடந்த 2023ஆம் ஆண்டு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் பதிவு நீக்கம் செய்யப்பட்ட பேருந்து என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
மேலும் விபத்துக்களைக் குறைப்பதற்கு வீதி மேம்பாட்டு ஆணைக்குழு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில் விபத்துக்குள்ளான பேருந்தை ஆய்வு செய்வதற்கு மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்தின் ஒரு குழுவினர் இன்று அப்பகுதிக்கு சென்றுள்ளது.
மேலும் வீதி பாதுகாப்பு குறித்த திட்டத்தில் இணைக்கப்பட்ட போக்குவரத்து மருத்துவ சபை மற்றும் போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் குழுவும் இன்று எல்ல பகுதிக்குச் சென்று விபத்துக்குள்ளான பேருந்தை ஆய்வு செய்யும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் நேற்று முன்தினம் (04) இரவு நடந்த கோர பேருந்து விபத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் வரை காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் நிலைமை தற்போது சீராகி வருவதாகவும், அவர்களில் யாருக்கும் உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் வைத்தியசாலையின் வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.























