எல்ல பேருந்து விபத்து - உயிர் பிழைத்த பயணியின் திகில் அனுபவம்
இலங்கை
எல்ல பேருந்து விபத்தில் உயிர் பிழைத்த பயணி ஒருவர், சம்பவம் நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு சாரதி பிரேக் செயலிழந்ததாகக் கூறியதாகத் தெரிவித்துள்ளார்.
குறித்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனருடன் உரையாடலில் ஈடுபட்டதாகவும், அப்போது ஒரு வளைவில் செல்லும்போது பிரேக் செயலிழந்ததாக சாரதி தெரிவித்ததாகவும் பாதிக்கப்பட்ட நபர் கூறியுள்ளார்.
சாரதியின் கூற்றைக் கேட்டு பேருந்து நடத்துனரும், ஏனைய சில பயணிகளும் சிரித்ததாகவும், அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.
எனினும், இரண்டாவது வளைவு ஒன்றில் பேருந்து பயணித்த போது பிரேக் செயலிழந்துள்ளதை உண்மையில் நாங்கள் உணர்ந்தோம்.
பின்னர் பேருந்து எதிர் திசையில் வந்த ஒரு வாகனத்துடன் மோதியது, அதன் பின்னர் அது பள்ளத்தாக்கில் கவிழந்து விபத்துக்குள்ளானது.
சுமார் ஒரு மணி நேரம் மயக்கமடைந்திருந்த நான், ஒரு குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு விழித்தேன்.
என்னால் நகர முடியவில்லை. பின்னர், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் வந்து எங்களை மீட்டனர் என்று குறித்த பயணி கூறினார்.
பாதிக்கப்பட்டவர் சிகிச்சை பெற்று வரும் பதுளை வைத்தியசாலையில் இருந்து ஊடகங்களுக்கு அளித்த செவ்வியின் போது இந்த தகவலை தெரிவித்தார்.
நேற்று இரவு வெல்லவாய நோக்கிச் சென்ற பேருந்து ஜீப் மீது மோதி 1000 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மொத்தம் 15 பேர் உயிரிழந்தனர், 18 பேர் காயமடைந்தனர்.
விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் சுமார் 30 பேர் இருந்தனர்.
06 ஆண்கள் மற்றும் 09 பெண்கள் சம்பவத்தில் உயிரிழந்தனர்.
காயமடைந்தவர்களில் 6 ஆண்கள், 5 பெண்கள், 3 ஆண் குழந்தைகள் மற்றும் 2 பெண் குழந்தைகள் அடங்குவர்.
தங்காலையிலிருந்து எல்லவுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
முப்படையினர் பொது மக்களின் உதவியுடன் மீட்பு பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.























