வெண்கல மணி போல ஒலிக்கும் மக்கள் திலகத்தின் குரல்..
சினிமா
1967-ம் ஆண்டுக்கு முன் வந்த படங்களில் மக்கள் திலகத்தின் குரல் கணீரென வெண்கல மணி போல ஒலிக்கும். துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பின் தொண்டையில் குண்டு பாய்ந்ததால் அவரது குரல்வளம் பாதிக்கப்பட்டது. படங்களில் வேறு யாரையாவது ‘டப்பிங்’ கொடுக்கச் செய்யலாம் என்ற யோசனைகளை மக்கள் திலகம் நிராகரித்து விட்டார். சொந்தக் குரலில் பேசி நடிக்கவே அவர் விரும்பினார். அவர் குரல் எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்று அதை ரசிகர்களும் மக்களும் ஏற்றுக் கொண்டனர்.
துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பின் முதலில் வந்த படம் அரசகட்டளை. குணமாகி வந்து அரசகட்டளை படப்பிடிப்பில் கலந்துகொண்டு அவர் பேசிய முதல் வசனம் 'குமரி நாட்டுக் குடிமகன்'. அதன் படப்பிடிப்பு ஏற்கெனவே 90 சதவீதம் முடிந்துவிட்டது. அதனால், அரசகட்டளையில் அவர் குரல் வளம் பாதிக்கப்பட்டது பெரிதாகத் தெரியவில்லை.
காவல்காரன் படத்தில்தான் குரல் பாதிப்பு நன்றாகத் தெரிந்தது. காவல்காரன் படத்தில் மக்கள் திலகம் பேசும் வசனங்கள் இரண்டு, மூன்று முறை ஒலிப்பதிவு செய்யப்பட்டன. ஒரு காட்சி முடிந்ததும் அதற்கான வசனங் களை அவர் மீண்டும் பேசி ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இப்படி ஒலிப்பதிவு செய்யப்பட்ட வசனங்களை எடிட்டிங்கின்போது காட்சிகளோடு ஒருங்கிணைப்பது கடினமான பணி. மக்கள் திலகம் தனக்கே உரிய தொழில் நுட்ப சாதுர்யத்தோடு பலமுறை பதிவு செய்யப்பட்ட வசனங்களில் எந்த ஒலிப்பதிவில் எந்தெந்த வார்த்தைகள் சரியாக ஒலிக்கிறதோ அவற்றை அதிலிருந்து ஒரு வார்த்தை, இதிலிருந்து ஒரு வார்த்தை என்று எடுத்து ஒன்று சேர்த்து காட்சிகளோடு ஒருங்கிணைத்து தொழில்நுட்ப வசதிகள் இல்லாத அந்தக் காலத்திலேயே அற்புதமாக எடிட் செய்தார்.
பாதிக்கப்பட்ட பேச்சு திறனை மீண்டும் பெற விடாமுயற்சியுடன் செயல்பட்டார். ‘ஸ்பீச் தெரபிஸ்ட்’ எனப்படும் பேச்சு பயிற்சி அளிக்கும் நிபுணர்களை வரவழைத்து பயிற்சிகள் எடுத்துக் கொண்டார். நரம்பியல் நிபுணர் டாக்டர் பி.ராமமூர்த்தி, குடும்ப டாக்டர் பி.ஆர்.சுப்பிரமணியம் ஆகியோரின் ஆலோசனையின்படி, நள்ளிரவில் உதவியாளர்களுடன் கடற்கரை சென்று அலைகள் வந்து மோதும்படி மணலில் அமர்ந்து உரக்கப் பேசி பயிற்சி மேற்கொண்டார். மாதக்கணக்கில் எடுத்துக் கொண்ட பயிற்சிகளால் பெருமளவில் பேச்சுத் திறனை மீண்டும் பெற்றார். தொண்டையில் குண்டு பாய்ந்ததால் பழைய குரலில் பேச முடியாமல் கட்டைத் தொண்டையில் ஒலித்த மக்கள் திலகத்தின் குரலும் கம்பீரமாகவே இருந்தது.
ஒரு நடிகனுக்கு குரல்வளம் முக்கியம். குரல்வளம் பாதிக்கப்பட்டு வார்த்தைகள் கொஞ்சம் தெளிவற்று ஒலித்தால் அதோடு அந்த நடிகரின் மார்க்கெட் தொலைந்துவிடும். வேறு எந்த நடிகருக்காவது இந்த நிலை வந்திருந்தால் காணாமல் போயிருப்பார்கள். விடாமுயற்சியுடன் பேச்சு பயிற்சி பெற்று பாதிக்கப்பட்ட அதே குரலோடு பேசி நடித்து முன்பைவிட அதிகமான வெற்றிகளை மக்கள் திலகம் கொடுத்தது மிகப் பெரிய சாதனை.
காவல்காரன் படத்தில் அவர் குரலில் ஏற்பட்ட மாற்றத்தாலும் சில வார்த்தைகள் தெளிவற்று ஒலித்ததாலும் திரையரங்குகளில் பல பெண்கள் கதறி அழுதனர். பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் சென்னை குளோப் தியேட்டரில் பெண்களுக்கென தனிக் காட்சி திரையிடப்பட்டதும் ஒரு சாதனைதான்.
(ஸ்ரீதர் சுவாமிநாதன் பதிவு)
























