தனுஷ் மாதிரியான தயாரிப்பாளர் கிடைக்கமாட்டார் - விசாரணை படத்திற்கு நான் சம்பளமே வாங்கல - வெற்றிமாறன்
சினிமா
வெற்றிமாறன் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியான 'விசாரணை' படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், ஆங்கில யூடியூப் சேனலான தி ஹாலிவுட் ரிபோர்ட்டர் சேனலுக்கு பேட்டி அளித்த வெற்றிமாறன், விசாரணை படம் குறித்து இதுவரை தெரியாத பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
பேட்டியில் பேசிய வெற்றிமாறன், "விசாரணை படத்தின் கதையோடு தனுஷைச் சந்திக்கச் சென்றேன். படத்திற்கு எவ்வளவு பணம் தேவைப்படும் என்று மட்டும் கேட்டார். நான் சொன்ன பணத்தை அவர் கொடுத்தார். பின்பு விசாரணை படத்தின் ஆஸ்கார் பிரச்சாரத்திற்காக தனுஷ் ரூ.3.5 கோடி செலவு செய்தார். அந்த மாதிரியான தயாரிப்பாளர் கிடைக்கமாட்டார்.
விசாரணை படத்தை நாங்கள் ரூ.2 கோடியே 75 லட்சத்திற்கு எடுத்தோம். இந்த படத்தில் நானும் நடிகர் தினேஷும் நடிகர் கிஷோரும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாரும் எடிட்டர் கிஷோரும் சம்பளம் வாங்கவில்லை.
சமுத்திரக்கனி மட்டும் ரூ.5 லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டார். அவருக்கு நாங்கள் சம்பளம் வாங்கவில்லை என்று தெரியாது. தெரிந்திருந்தால் அவரும் அட்வான்ஸ் வாங்கி இருக்கமாட்டார்.
விசாரணை படம் தியேட்டரில் கிட்டத்தட்ட ரூ. 3 கோடியே 75 லட்சங்கள் வரை வசூலித்தது. அந்த வகையில் அந்த படம் வெற்றிப் படம் தான். ஒருவேளை அந்த படத்திற்கான நாங்கள் சம்பளம் வாங்கி இருந்தால் அந்த படத்தை அப்போது வணிக ரீதியாக வெற்றி படமாக மாற்றி இருக்க முடியுமா என்று தெரியவில்லை.
இன்று விசாரணை படத்தை உருவாக்க வேண்டும் என்றால் ரூபாய் 8 கோடிகள் வரை செல்வாகும். நாங்கள் அந்த படத்தை மிகவும் உணர்வுப்பூர்வமாக எடுத்தோம். இந்த கதையை உலகத்திற்குச் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு இருந்தேன்" என்று தெரிவித்தார்.






















