ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 74 ஆவது ஆண்டு நிறைவு
இலங்கை
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) 74 ஆவது ஆண்டு நிறைவு தினம் இன்றாகும்.
கட்சியின் 74 ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று பிற்பகல் கொழும்பில் உள்ள கட்சி தலைமையகத்தில் நடைபெறும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செப்டம்பர் 2, 1951 அன்று முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவினால் தொடங்கப்பட்டது.
அண்மைய தேர்தல் பின்னடைவு இருந்தபோதிலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பல ஆண்டுகளாக இலங்கையின் அரசியல் களத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஸ்தாபிக்கப்பட்டு 5 வருடங்களின் பின்னர் மக்கள் ஐக்கிய முன்னணியின் ஆதரவுடன் நாட்டைக் கைப்பற்றும் அளவுக்கு பலமான மக்கள் சக்தியைக் கட்டியெழுப்ப முடிந்தது.
1956ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணியை வெற்றியை நோக்கி வழிநடத்திய எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க நாட்டின் நான்காவது பிரதமரானார்.
அவரது ஆட்சிக் காலத்தில் சர்வதேச நிறுவனங்களிடம் இருந்த இலங்கையின் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மக்கள் மயமாக்கப்பட்டதுடன் சிங்களம் அரச மொழியாக அறிவிக்கப்பட்டது.
அன்று முதல் இதுவரை இடதுசாரி கட்சிகள் மற்றும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கூட்டணி 30 வருடங்களுக்கு மேலாக நாட்டின் ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக் கொண்டது.
இலங்கையை குடியரசாக மாற்றியதன் பெருமையும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கத்திற்கேயுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பல ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்களை உருவாக்கியுள்ளது.
குறிப்பாக உலகின் முதல் பெண் பிரதமரான சிறிமாவோ பண்டாரநாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை 41 ஆண்டுகள் வழிநடத்தியமையும் குறிப்பிடத்தக்கது.























