இந்நாளை மறக்க முடியாத நாளாக மாற்றியமைத்த அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்- விஷால் நெகிழ்ச்சி பதிவு
சினிமா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால் தற்போது ரவி அரசு இயக்கத்தில் 'மகுடம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இது அவரது 35-வது படம் ஆகும். நடிகர் விஷாலுக்கு எப்போது திருமணம்? என்று திரை உலகமே ஆவலுடன் காத்திருந்தது. ஆனாலும் நடிகர் சங்க கட்டிடம் திறக்கப்பட்ட பின்னர் தான் தனது திருமணம் என்பதில் விஷால் உறுதியாக இருந்தார்.
இந்த நிலையில் சென்னை அண்ணா நகரில் உள்ள விஷால் இல்லத்தில் விஷால் - சாய் தன்ஷிகா திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த திருமண நிச்சயதார்த்த நிகழ்வில் இரு வீட்டார் மற்றும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து தடபுடல் விருந்தும் அளிக்கப்பட்டது.
இவருக்கு பிறந்தநாள் மற்றும் திருமண நிச்சய வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில்
"இதயம் கனிந்த நன்றிகள்
நேற்று எனது பிறந்த நாளில் மக்கள் நல இயக்கத்தின் சார்பில் என் அன்பு தம்பி, தங்கைகள் தமிழகம் முழுவதும் பல இடங்களில் பல்வேறு நற்பணி, நல திட்ட உதவிகள் சமூக நலச் சேவைகளில் ஈடுபட்டதற்கு என் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
சாலையோர மக்களுக்கு உணவு வழங்கிய அன்பு சகோதரர் நடிகர் திரு.யோகிபாபு மற்றும் குடுபத்தினர்கள், பட்டினத்தார் கோவிலில் அன்னதானம் வழங்கிய சண்டைப் பயிற்சியாளர் திரு.சூப்பர் சுப்புராயன், திரு.திலீப் சுப்புராயன் அவர்களுக்கும், மேலும் தமிழ் நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மும்பை மாநிலங்களில் உள்ள அன்பு ரசிகர்கள் பல்வேறு இடங்களில் மக்களுக்கு பயன்பெறும் வகையில் நற்பணி நலத்திட்ட உதவிகளை வழங்கிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
அதேநேரத்தில், நேற்று நடைபெற்ற எனது திருமண நிச்சயதார்த்தத்தை முன்னிட்டு எனக்கும் சாய் தன்ஷிகா - விற்கும் வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள், தொலைபேசி, நேரடியாக என பல வழிகளில் தெரிவித்த திரையுலக நண்பர்கள், அரசியல் தலைவர்கள், ஊடக, பத்திரிகை நண்பர்கள், அன்பிற்கினிய ரசிகர்கள் மற்றும் அன்பு பொதுமக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
எனது பிறந்தநாளும், வாழ்வின் புதிய அத்தியாயமும் ஒரே நாளில் இணைந்து மகிழ்ச்சியளித்த இந்நாளை மறக்க முடியாத நாளாக மாற்றியமைத்த அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்.?" என மிகவும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
























