முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பில் முக்கியத் தகவல்
இலங்கை
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட பிற பொருட்கள் தொடர்பான தகவல்களை இதுவரை எவரும் வெளிப்படுத்தவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையின் ஆறாவது பெரிய மனித புதைகுழி தொடர்பான வழக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.
இதன்போது கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட பிற பொருட்களை அடையாளம் காண்பது தொடர்பில் 3 வாரங்களுக்கு முன்னதாக பத்திரிகையில் விளம்பரப்படுத்தப்பட்ட போதும் குறித்த பொருட்களின் அடையாளத்தை வெளிப்படுத்த எவரும் முன்வந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரண வி. எஸ். நிரஞ்சன் தெரிவித்தார்.
மேலும் குறித்த பொருட்கள் தொடர்பாக தகவல் தெரிவிப்பவர்களின்பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும், தகவல் தெரிந்தவர்கள் அச்சமின்றி முன்வருமாறு அவர் அழைப்பு விடுத்தார்.
2025 ஓகஸ்ட் 3ஆம் திகதி காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பானஅலுவலகம் (OMP) பத்திரிகை விளம்பரத்தில் 30 மனித எலும்புகளுடன் தொடர்புடைய பிற பொருட்களின் பட்டியலை மக்களிடம் அறியப்படுமாறு வெளியிட்டிருந்தது.
தடவியல் அறிக்கைகளின் படி, கொக்குத்தொடுவாய் புதைகுழியில் 1994–1996 ஆண்டுகளில் புதைக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்களின் உடல்கள் காணப்பட்டதாகவும் அவர்களில் பெரும்பாலானவர்கள் துப்பாக்கிச் சூடு அல்லது வெடிப்பு காயங்களால் உயிரிழந்ததாகவும் சட்ட வைத்திய அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.























