மாதம்பட்டி ரங்கராஜ் மீது திருமண மோசடி- பாலியல் அத்துமீறல் வழக்குகள் பாய்கிறது - மகளிர் போலீசார் தீவிர விசாரணை
சினிமா
பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் உறவு கொண்டதாக ஆடை வடிவமைப்பாளரான ஜாய்கிரிசில்டா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அவர் அளித்துள்ள புகாரில், மாதம்பட்டி ரங்கராஜூடன் நான் பழகும்போது அவருக்கு திருமணமானது தெரியாது. பின்னர் அதுபற்றி தெரிந்து கேட்டபோது, "முதல் மனைவியை விவாகரத்து செய்யப்போகிறேன். நாம் சேர்ந்து வாழலாம்" என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து இருவரும் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தோம். இதில் நான் கர்ப்பம் ஆனேன். வயிற்றில் வளரும் குழந்தையை கலைத்து விடலாம் என்று கூறினார். இதற்கு நான் சம்மதிக்காத நிலையில் எனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு நீங்கள்தான் அப்பா என்று கூறினேன். இது அவருக்கு பிடிக்காததால் என்னை அடித்து உதைத்தார். தற்போது என்னுடன் பேசுவதையே நிறுத்தி விட்டார். இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்த நிலையில் என்னை ஏற்றுக்கொள்ள மறுக்கும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஜாய்கிரிசில்டா திருவான்மியூரில் வசித்து வரும் நிலையில் அவரது புகார் மீது அடையாறு மகளிர் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். முதல் மனைவியை விவகாரத்து செய்யாமல் ஜாய்கிரிசில்டாவை 2-வதாக திருமணம் செய்திருப்பதும், அவருடன் பாலியல் உறவு வைத்து ஏமாற்றி இருப்பதும் குற்றமாக கருதப்படும். எனவே மாதம்பட்டி ரங்கராஜ் மீது திருமண மோசடி, பாலியல் அத்துமீறல் ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பாய்வதற்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.





















