சர்வதேச ரீதியில் இலங்கை மத்திய வங்கி ஆளுநருக்கு கிடைத்த அங்கீகாரம்
இலங்கை
இலங்கை மத்திய வங்கியின் (CBSL) ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, குளோபல் ஃபைனான்ஸ் (Global Finance) இதழின் 2025 மத்திய வங்கியாளர் அறிக்கை அட்டையில் மதிப்புமிக்க ‘A’ தரத்தைப் பெற்றுள்ளார்.
இது இலங்கை மத்திய வங்கி தனது 75 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில் கிடைக்கும் அங்கீகாரமாகும்.
1994 முதல் தரவரிசைகளை வெளியிட்டு வரும் குளோபல் ஃபைனான்ஸ், பணவீக்கக் கட்டுப்பாடு, நாணய நிலைத்தன்மை, வட்டி விகித மேலாண்மை, பொருளாதார வளர்ச்சி மற்றும் அரசியல் சுதந்திரம் ஆகியவற்றின் அடிப்படையில் உலகளவில் கிட்டத்தட்ட 100 மத்திய வங்கி ஆளுநர்களை மதிப்பீடு செய்கிறது.
இதில், சிறந்த செயல்திறனுக்கான ‘A+’ முதல் முழுமையான தோல்விக்கான ‘F’ வரை தரங்கள் உள்ளன.
இந்த நிலையில், இந்த ஆண்டு ‘A” தரத்தை பெற்ற ஒன்பது ஆளுநர்களில் கலாநிதி நந்தலால் வீரசிங்கவும் ஒருவர்.
இந்த உயர் அங்கீகாரம், உலகெங்கிலும் உள்ள தலைசிறந்த மத்திய வங்கி ஆளுநர்களில் ஒருவராக நந்தலால் வீரசிங்கவை இடம்பிடிக்கச் செய்துள்ளது.
மேலும், நாட்டின் சவாலான காலங்களில் இலங்கையின் பொருளாதாரத்தை வழிநடத்துவதில் அவரது விதிவிலக்கான தலைமைத்துவத்தையும் மூலோபாய புத்திசாலித்தனத்தையும் அங்கீகரிக்கிறது.
சிலி, கோஸ்டாரிகா, இந்தோனேசியா, ஜமைக்கா, கென்யா, மொராக்கோ, பராகுவே மற்றும் பெரு ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆளுநர்களும் A தர்த்தை வென்றுள்ளனர்.
அதேநேரம், டென்மார்க், அமெரிக்கா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மூன்று ஆளுநர்கள் மட்டுமே ‘A+’ தரத்தைப் பெற்றனர்.






















