• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பொலிவியத் தேர்தல் முடிவுகள் தரும் கசப்பான படிப்பினை

தென்னமெரிக்க நாடான பொலிவியாவில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் அறுதிப் பெரும்பான்மை பெறாத நிலையில் இரண்டாவது சுற்றுத் தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 17ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் 8 வேட்பாளர்கள் களமிறங்கி இருந்தனர். இதில் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ரொட்றிகோ பாஸ் பெரைரா 31.02 விழுக்காடு வாக்குகளைப் பெற்று முதலிடம் பெற்றார். லிபர்ட்டி மற்றும் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட யோர்க் குயிரோகா 27.76 விழுக்காடு வாக்குகளுடன் இரண்டாமிடத்தைப் பெற்றார்.
 
பொலிவிய தேர்தல் முறைமையின் கீழ் ஒருவர் 50 விழுக்காட்டுக்கும் அதிகமான வாக்கைப் பெற வேண்டும், அல்லது 10 வீத வித்தியாசத்துடன் 40 விழுக்காடு வாக்குகளைப் பெற வேண்டும். அத்தகைய வாக்கு வீதத்தை எந்தவொரு வேட்பாளரும் பெற்றிராத நிலையில் அக்டோபர் 19ஆம் திகதி நடைபெறவுள்ள இரண்டாவது சுற்றில் பெரைரா மற்றும் குயிரோகா ஆகியோர் மோதவுள்ளனர்.

57 வயதான பெரைரா, ராறிஜா பிரதேச செனட்டராக தற்போது பதவி வகித்து வருகிறார். பொலிவியாவின் 60ஆவது ஜனாதிபதியாகப் பதவி வகித்த ஜய்மே பாஸ் ஸமோரா அவர்களின் மகனான இவர் இராஜதந்திரியாகவும் அரசியல்வாதியாகவும் பணியாற்றிய அனுபவம் மிக்கவர்.
 
65 வயது நிரம்பிய குயிரோகா நீண்டகால அரசியல் அனுபவம் கொண்டவர். 37 வயதிலேயே துணை ஜனாதிபதி பதவி வகித்த இவர், ஜனதிபதியாகப் பதவி வகித்த ஹுகோ பான்சர் உடல்நலக் குறைவு காரணமாக 2001இல் பதவி விலகிய போது ஒரு வருடத்துக்கும் அதிகமான காலம் ஜனாதிபதியாகவும் கடமையாற்றிய அனுபவம் மிக்கவர்.
 
பொலிவியாவின் 68ஆவது ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கப் போகும் இரண்டாவது சுற்றுத் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும், பொலிவியாவின் கடந்த 20 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் ஒரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்துவதாகவே அமையும் என்பது குறிப்பித்தக்கது.
 
2006ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று பொலிவியாவின் 65ஆவது ஜனாதிபதியாகத் தெரிவான ஈவா மொரலஸ், பொலிவியாவை சோசலிசப் பாதையை நோக்கி அழைத்துச் சென்ற தலைவராக அறியப்படுகின்றார். அந்த நாட்டுப் பழங்குடி மக்களின் பிரதிநிதியாக விளங்கும் இவர் இன்றுவரை அதிக மக்கள் செல்வாக்கு மிக்க தலைவராக மதிக்கப்படுகின்றார். 2019ஆம் ஆண்டுவரை நாட்டின் ஜனாதிபதியாகப் பதவி வகித்த இவர் தனது பதவிக் காலத்தில் நாட்டின் வளங்களை தேச உடமையாக்கியதுடன் பொருளாதார வளர்ச்சியையும் எட்டியிருந்தார். அது மாத்திரமன்றி, வெனிசுவேலாவின் மேனாள் அதிபர் ஹியூகொ சாவேஸ் அவர்களுடன் இணைந்து 21ஆம் நூற்றாண்டின் சோசலிசம் என்ற கொள்கையின் வளர்ச்சிக்காகவும் பாடுபட்டவர். 1997ஆம் ஆண்டில் அவரால் தேற்றுவிக்கப்பட்ட சோசலிசத்துக்கான இயக்கம் என்ற கட்சி கடந்த 20 ஆண்டுகளாகத் தனது பிடியில் வைத்திருந்த ஆட்சியதிகாரத்தை தற்போதைய ஜனாதிபதித் தேர்தலில் இழந்து நிற்பதைப் பார்க்க முடிகின்றது.

பழங்குடியின மக்கள் உள்ளிட்ட பெரும்பான்மை மக்களின் ஆதரவு கட்சிக்கும், இடதுசாரிக் கொள்கைகளுக்கும் உள்ள போதிலும், அரசியல் தலைவர்கள் மத்தியில் நிலவும் கொள்கை வேறுபாடு மக்களை விரக்தி நிலையை நோக்கித் தள்ளியுள்ளமையை அவதானிக்க முடிகின்றது. அதன் விளைவாக இன்று வலதுசாரிகளின் மீள் எழுச்சி ஏற்பட்டுள்ளது. தற்போது ஜனாதிபதியாகப் பதவி வகிக்கும் தனது மேனாள் சகா லூயிஸ் ஆர்ஸ் அவருடன் ஏற்பட்ட கொள்கை முரண்பாடு, அவருக்கு எதிராகப் பெரும்பாலும் பழங்குடி மக்களை அணிதிரட்டி தலைநகரை நோக்கி ஏற்பாடு செய்யப்பட்ட பேரணி, தற்போது நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மேற்கொள்ளப்பட்ட முயற்சியில் ஏற்பட்ட தோல்வி என மொரலஸின் அண்மைக்காலச் செயற்பாடுகள் யாவும் தோல்வியிலேயே முடிந்திருந்தன.

முன்னாள் நண்பர்களுக்கு இடையே நடைபெற்றுவரும் மோதல்கள் சாதாரண மக்களைப் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியிருந்த பின்னணியிலேயே தற்போது நடைபெற்ற தேர்தலின் முடிவுகளை நோக்க வேண்டி உள்ளது. இன்றைய சூழலுக்கான முழுப் பொறுப்பையும் இடதுசாரிகளே ஏற்றுக் கொண்டாக வேண்டும்.
 
அது மாத்திரமன்றி பொலிவியாவின் பொருளாதாரம் இன்று மிக மோசமான நிலையில் உள்ளது. லூயிஸ் ஆர்ஸின் காலத்திலேயே பொருளாதாரம் சரிவைக் காணத் தொடங்கியிருந்தது. எரிபொருளுக்கான தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு, டொலர் கையிருப்பு குறைவடைந்தமை என பொருளாதாரம் பலத்த அடியைச் சந்தித்திருந்தது. மொரலஸ் அறிமுகம் செய்திருந்த வறுமை ஒழிப்பு உள்ளிட்ட திட்டங்களைக் கைவிட வேண்டிய நிலை உருவாகி உள்ளது. உலக வங்கியின் சிக்கன நடைமுறைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகி உள்ளது.

அன்றாட வாழ்வில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தேர்தல் முடிவுகளில் நிச்சயம் எதிரொலித்தே தீரும். அரசியல்வாதிகள் எத்தகைய உயர்ந்த இலட்சியங்களை, கொள்கைகளைக் கொண்டிருந்தாலும் வாக்காளர்களின் முடிவு அன்றாடப் பிரச்சனைகளின் அடிப்படையிலேயே அமைந்து விடுவதை உலகம் முழுவதிலும் பார்க்க முடிகின்றது. பொலிவிய வாக்காளர்களும் அதற்கு விதிவிலக்கல்ல.

7.93 மில்லியன் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் பொலிவியாவில் உள்ளனர். இதில் 6.55 மில்லியன் வாக்காளர்கள் இம்முறை தேர்தலில் வாக்களித்திருந்தனர். வாக்களிப்பு வீதம் 82.53 ஆக இருந்தது. அளிக்கப்பட்ட வாக்குகளில் 78.14 விழுக்காடு வாக்குகள் செல்லுபடியான வாக்குகளாகக் கருதப்பட்டன. 19.38 விழுக்காடு வாக்குகள் நிராகரிக்கப்பட்ட வாக்குகளாகப் பதிவாகி உள்ளதோடு, 2.47 விழுக்காடு வாக்குகள் வெற்று வாக்குகளாகவும் பதிவாகி உள்ளன. இந்த இரண்டையும் சேர்த்து மொத்தமாக 1.43 மில்லியன் வாக்குகள் உள்ளன. இது நடைபெற்று முடிந்த தேர்தலில் இரண்டாம் இடத்தைப் பிடித்த குயிரோகா பெற்ற வாக்குகளை விடவும் அதிகமாகும். அவர் 1.37 மில்லியன் வாக்குகளையே பெற்றிருந்தார். அதேவேளை, தேர்தலை ஒரு எதிர்ப்பு நடைமுறையாகப் பின்பற்றியவர்கள், வாக்களிக்கத் தவறியவர்கள் ஆகியோரைக் கணக்கிலெடுத்தால் அது மொத்த வாக்காளர்களின் 36.33 விழுக்காடாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தனது ஆதரவாளர்கள் தேர்தலில் பங்கெடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என மொராலஸ் கோரிக்கை வைத்திருந்த நிலையில் அவரது கோரிக்கைக்குச் செவிசாய்த்து அவரது வாக்காளர்கள் வெற்று வாக்குகளைப் பதிவு செய்ததுடன், வாக்குகளைத் திட்டமிட்டே வறிதாக்கினார்களா என்பது சிந்தனைக்கு உரிய விடயம். தனது அரசியல் நிலைப்பாட்டை உறுதி செய்யும் நோக்குடன் இத்தகைய ஒரு தந்திரோபாய உத்தியை மொராலஸ் கடைப்பிடித்து இருந்தாலும் கூட அத்தகைய நடவடிக்கை 'பொலிவிய மக்கள் சோசலிசத்தை நிராகரித்து விட்டார்கள்' என்கின்ற மேற்குலகின் கூக்குரலுக்கு வலுச் சேர்ப்பதாக உள்ளதை மறுத்துவிட முடியாது.

கடந்த 20 ஆண்டு கால ஆட்சியில் ஜனாதிபதிகளாகப் பதவி வகித்த மொரலஸ் மற்றும் ஆர்ஸ் ஆகியோர் சீனா மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகளோடு நெருங்கிய உறவுகளைப் பேணி இருந்தார்கள். பன்னாட்டு வணிக நிறுவனங்களின் தடையறாத சுரண்டலில் இருந்து நாட்டின் பொருளாதாரத்தை ஓரளவேனும் பாதுகாத்து இருந்தார்கள். விளிம்புநிலை மக்களின் கல்வி, பொருளாதார மற்றும் அடிப்படை வசதிகளின் முன்னேற்றத்துக்கான திட்டங்களை வகுத்தார்கள். அவை முழு வெற்றியைக் காணாது விடினும் மக்களின் வாழ்வில் சிறிதளவு மாற்றத்தையேனும் ஏற்படுத்தி இருந்தன.

அக்டோபரில் நடைபெறவுள்ள இரண்டாவது சுற்றுத் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் சோசலிசத்துக்கான இயக்கம் நடைமுறைப்படுத்திய திட்டங்கள் காணாமல் போய்விடும் என்பது நிச்சயம். சோசலிச முகாமில் தலைவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்கள் இறுதியில் பாதிப்பை ஏற்படுத்தியது என்னவோ அவர்களை நம்பி, அவர்களின் பின்னால் அணிதிரண்ட மக்களைத் தான் என்பதே கசப்பான யதார்த்தம்.

சுவிசிலிருந்து சண் தவராஜா
 

Leave a Reply