கிரேட் பிரிட்டன்–இலங்கை இடையிலான கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம் கைச்சாத்து
இலங்கை
வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையில் முக்கிய மைல்கல் எனக் கருதப்படும், கிரேட் பிரிட்டன் மற்றும் வடக்கு அயர்லாந்து ஐக்கிய இராச்சிய அரசாங்கத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலான இருதரப்பு கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இது இலங்கை கடன் நிலைத்தன்மையை மீட்டெடுத்து பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப முயற்சித்து வருவதை உறுதிப்படுத்துகின்றது.
மேலும் இச்செயல்முறை அதிகாரப்பூர்வ கடன் வழங்குநர்கள் குழுவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் இருதரப்பு கலந்துரையாடல்களின் தொடர்ச்சியாக நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் சார்பாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும மற்றும் ஐக்கிய இராச்சிய அரசாங்கத்தின் சார்பாக இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகர் திரு. ஆண்ட்ரூ பேட்ரிக் ஆகியோர் நிதி அமைச்சில் அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளனர்.
மறுசீரமைக்கப்பட்ட கடன் தொகை:
அமெரிக்க டொலர்: US$ 86,068,439.80
ஜப்பானிய யென்: ¥582,940,944.31
இந்த ஒப்பந்தம், இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சிய அரசாங்கத்திற்கிடையேயான வலுவான மற்றும் நீண்டகால உறவுகளை மேலும் மேம்படுத்தும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.























