• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தமிழ்ப் பத்திரிகை உலகில் தனி முத்திரை பதித்தவர்

சினிமா

'புதுக்கோட்டையில் இருந்து தன்னுடைய ஓவியத் திறமை, ஓவியக் கலை மீது கொண்ட ஆர்வத்தால் சென்னைக்கு வந்தவர் மாருதி. பல்வேறு சவால்களை எதிர்கொண்டு, வெற்றி பெற்று தமிழ்ப் பத்திரிகை உலகில் தனி முத்திரை பதித்தார்.

அந்தக் காலத்தில் புகழ் பெற்ற ஓவியர்களான சில்பி, ராஜன், கே.மாதவன், ஆர். நடராஜன், கோபுலு, வர்ணம், என் தந்தை மணியம் ஆகியோரது ஓவியங்களால் கவரப்பட்டு ஓவியரானவர் மாருதி.

இவர்களில் ஓவியர் மாதவனை மானசீகக் குருவாகக் கொண்டவர் மாருதி. ஓவியர் நடராஜனிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பும் பெற்றவர். அவர்கள் இருவரின் வாஷ் டிராயிங் பாணியால் ஈர்க்கப்பட்டு, தனக்கென்று ஓர் பாணியை உருவாக்கிக் கொண்டவர் மாருதி.

பத்திரிகைகளில் கறுப்பு-வெள்ளைப் படங்கள் கோலோச்சிய அந்தக் காலத்தில், கோட்டுச்சித்திரங்கள் வெளியாகிறபோது பளிச்சென்று இருக்கும். வாஷ் டிராயிங் படங்கள் அதுபோல இருக்காது. ஆனாலும், மாருதி வரைந்த கறுப்பு- வெள்ளை ஓவியங்களும் பளிச்சென்று வாசகர்களை ஈர்த்தன. அவரது ஓவியங்களில் முக லட்சணம், முகப் பாவங்கள், லைட் அண்டு ஷேடு, கதைக் காட்சிகள்... எல்லாமே பார்ப்பவர்களை வைத்த கண் வாங்காமல் ரசிக்க வைக்கும்.

பத்திரிகைகளில் வண்ணப் படங்கள் வெளியாகத் தொடங்கியவுடன், மாருதியின் வண்ணப் படங்களுக்கு வாசகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்தது.

நான் ஓவியக் கல்லூரியில் படித்தபோது, மயிலாப்பூரில் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் இருந்த லட்சுமி தங்கும் விடுதியின் அறையொன்றில்தான் மாருதி தங்கியிருந்து ஓவியங்கள் வரைவது வழக்கம். மாலை நேரத்தில் கல்லூரியைவிட்டு வீடு திரும்பும்போது மாருதியை சந்தித்துப் பேசுவேன்.

ஆரம்பக் காலத்தில் குமுதத்தில் படங்கள் வரைந்தபோது, பேருந்தைப் பிடித்து அலுவலகத்துக்குச் சென்று கதையைப் படித்து படம் வரைய வேண்டிய காட்சி குறித்து உதவி ஆசிரியர்களோடு விவாதித்துவிட்டு வருவார். அதன்பின்னர், படத்தை வரைந்து, அதை எடுத்துகொண்டு போய் கொடுத்துவிட்டு வருவார். திருமணத்துக்குப் பிறகு, எங்கள் வீட்டுக்கு அருகிலேயே மாருதியின் வீடும் இருந்தது. அவ்வப்போது சந்தித்துப்பேசுவோம். அவரை சந்திக்க யார் வந்தாலும், பேசிக் கொண்டே, தன்னுடைய ஓவிய வேலையையும் கவனிப்பார்.

நானும் அவரும் சேர்ந்து ஓவியர் கோபுலுவை சந்தித்துப் பேசுவோம். கோபுலுவின் அதீத எனர்ஜி எங்களுக்கும் தொற்றிக் கொள்ளும். சென்னையில் முக்கியமான ஓவியக் கண்காட்சிகளில் மாருதியும், நானும் ஸ்கூட்டரில் சென்று பார்ப்போம். அப்போது, ஓவியங்களில் உள்ள மிகவும் நுட்பமான விஷயங்களை ரசித்து கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்வோம். அவருடைய வீட்டுக்குப் போனால், வெகுநேரம் பேசிவிட்டே புறப்படுவேன். என்னை வழியனுப்ப, அடுக்குமாடிக் குடியிருப்பின் கீழ்வரை இறங்கிவருவார்.

பத்திரிகைகளுக்கு நிறைய ஓவியங்கள் வரைந்ததைத் தவிர, அவருக்கு ஏராளமான ஆயில் பெயிண்டிங் செய்யும் வாய்ப்புகளும் கிடைத்தன. அவர் ஆயில் பெயிண்டிங்கில் வல்லவர் என்பதால், நான்ஆயில் பெயிண்டிங் செய்தால், அவற்றை அவரிடம் காட்டி, ஆலோசனைகளைக் கேட்டதுண்டு. அவர் கூறிய சிறுதிருத்தங்கள்கூட ஓவியத்துக்கு மெருகூட்டியதை என்னால் மறக்க முடியாது.

'கண்மணி' மாத இதழில் பல ஆண்டுகளாக, அவர் வரைந்த பெண் ஓவியங்கள்தான் அட்டைப் படங்களாக இடம்பெற்றன. அவற்றில் மாருதி வெளிப்படுத்திய அழகுணர்ச்சியும், வித்தியாசங்களும் வியக்க வைக்கும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், அவர் தூரிகை பிடித்து ஆடியவர்!'' என்றார் மணியன் செல்வன்.

நன்றி: தினமணி

Leave a Reply