சீனாவில் சோகம் - கட்டுமான பணியின்போது பாலம் இடிந்து 12 தொழிலாளர்கள் பலி
சீனாவின் குயிங்காய் மாகாணத்தில் மஞ்சள் ஆறு பாய்கிறது. இந்த ஆற்றின் மீது மிகப்பெரிய ரெயில்வே பாலம் கட்டப்பட்டு வருகிறது.
2 கிலோ மீட்டர் தூரமுள்ள இந்த பாலம் கட்டுமான பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்தப் பாலம் இடிந்து விழுந்தது.
இதனால் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் ஆற்றில் விழுந்தனர். இதுகுறித்து மீட்பு படையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் அவர்கள் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த ஆற்றில் இருந்து 12 பேர் பிணமாக கண்டெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு அந்த நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் மேலும் 4 பேர் ஆற்றில் விழுந்து மாயமாகி இருப்பதாக கூறப்படுகிறது. எனவே ஹெலிகாப்டர், படகு மூலம் அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கட்டுமான பணியின்போதே பாலம் இடிந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே இதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.






















