• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விளக்கமறியலில் வைக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி

இலங்கை

எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் சீனியின் அளவு அதிகரித்ததன் காரணமாக வைத்திய ஆலோசனையின் பேரில் முன்னாள் ஜனாதிபதி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டுப் பயணத்தின் போது அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (22) மதியம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார்.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அவர் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டபோது இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

அதன்படி, ரணில் விக்ரமசிங்க நேற்றையதினம் பிற்பகல் 03.00 மணியளவில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பதவிக் காலத்தில், 2023 செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவின் நியூயோர்க்கிற்குச் சென்றிருந்த நிலையில் சுற்றுப்பயணத்தை முடித்து நாட்டிற்குத் திரும்புவதற்கு முன்பு, முன்னாள் ஜனாதிபதி தனது மனைவி மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள இங்கிலாந்து சென்றிருந்தார்.

இங்கிலாந்தின் வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஜான் ராஃப்டர், லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் மூலம் முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது மனைவிக்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பிதழ் வழங்கியிருந்தார்.

இருப்பினும், முன்னாள் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட சுற்றுப்பயணத்தின் போது அரசாங்க நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி ஒரு நபர் சமீபத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு அளித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, விசாரணை தொடங்கப்பட்டு, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க மற்றும் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட உதவியாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோரிடமிருந்து சமீபத்தில் அந்தத் திணைக்களம் வாக்குமூலங்களைப் பதிவு செய்தது.

அதைத் தொடர்ந்து, விக்ரமசிங்கவை நேற்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் நேற்று காலை 9.00 மணியளவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரானார்.

சுமார் 4 மணி நேரம் வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி பிற்பகல் 1.15 மணியளவில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் நேற்று (22) இரவு முன்னாள் அமைச்சர்கள் துமிந்த திசாநாயக்க, பிரசன்ன ரணதுங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் உள்ளிட்டோர் ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்க மகசின் சிறைச்சாலைக்கு சென்றுள்ளனர்.

ஆனால், அவர்கள் சிறைச்சாலையை அடைந்த போதிலும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இலங்கை வரலாற்றில் முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply