இலங்கை வரலாற்றில் முதல் சந்தர்ப்பம்
இலங்கை
அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டு அவர் ஜனாதிபதியாக பணியாற்றியபோது மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களுடன் தொடர்புடையது.
குற்றப் புலனாய்வுப் பிரிவில் இந்த விடயம் தொடர்பாக வாக்குமூலம் வழங்கிய பின்னரே 76 வயதான முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்பட்டுள்ளார்.
விரைவில் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மிக மோசமான பொருளாதார நெருக்கடி மக்கள் எழுச்சியைத் தூண்டிய வேளையில் அவரது முன்னோடி கோத்தபய ராஜபக்ஷ தப்பி ஓடி, பதவி விலகி தொடர்ந்து 2022 முதல் 2024 வரை ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பணியாற்றினார்.
வங்குரோத்து நிலையில் இருந்த நாட்டை மீண்டும் பொருளாதார மீட்சிப் பாதையில் கொண்டு செல்ல உதவியதற்காக அவர் பரவலாகப் பாராட்டப்பட்டார்.
1990 ஆம் ஆண்டு முதல் ஆறு தனித்தனி சந்தர்ப்பங்களில் அவர் பிரதமராகப் பணியாற்றினார்.
ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியாக இருந்த காலத்தில் 23 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கான செலவு 600 மில்லியன் ரூபாவுக்கும் ($2 மில்லியன்; £1.4 மில்லியன்) அதிகம் என மதிப்பிடப்படுகிறது.
இந்த நிலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட கைது, 2023 ஆம் ஆண்டு கியூபாவில் நடந்த G77 உச்சிமாநாட்டிலிருந்து ரணில் விக்ரமசிங்க திரும்பி வரும் வழியில் இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு தனி நிகழ்வுடன் தொடர்புடையது என்று புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த சந்தர்ப்பத்தில், அவரும் அவரது மனைவியும் வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சிஐடியின் தகவலின்படி, லண்டன் பயணத்தினால் அரசாங்கத்திற்கு சுமார் ரூ. 16.9 மில்லியன் செலவாகியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில், விசாரணையின் ஒரு பகுதியாக, முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏகநாயக்க மற்றும் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோரை புலனாய்வாளர்கள் விசாரித்திருந்தனர்.
எவ்வாறெனினும், ரணில் விக்ரமசிங்கவின் கைதானது, இலங்கை வரலாற்றில் ஒரு முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்பட்ட முதலாவது சந்தர்ப்பமாக பதிவாகியுள்ளது.























