சீனாவை எதிர்கொள்ள இந்திய உறவு அவசியம் - நிக்கி ஹாலே எச்சரிக்கை
இந்தியா மீது 25 சதவீதம் இறக்குமதி வரி விதித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக கூடுதலாக 25 சதவீதம் வரியை விதித்துள்ளார்.
இந்தியா-அமெரிக்கா வர்த்தக உறவைத் தாண்டி சர்வதேச அளவில் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஐநாவுக்கான அமெரிக்க முன்னாள் தூதரான நிக்கி ஹாலே கூறியுள்ளதாவது:
இந்தியா உடனான டிரம்ப் நிர்வாகத்தின் உறவு மிக முக்கியமான கட்டத்தில் இருக்கிறது. சீனாவை எதிர்கொள்ள அமெரிக்காவுக்கு இந்தியாவின் தயவும், உறவும் மிகவும் அவசியம்.
இந்தியா டிரம்பின் கருத்தை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் ஒரு தீர்வு காண அமெரிக்கா உடன் இணைந்து செயல்பட வேண்டும்.
இந்தியா, சீனாவைப் போல ஒரு எதிரி அல்ல. டிரம்ப் நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கை இலக்குகளை அடைய, அமெரிக்கா- இந்தியா உறவுகளை மீட்டெடுப்பது மிகவும் முக்கியமானவை.
ஜவுளி, மலிவான தொலைபேசிகள் மற்றும் சோலார் பேனல்கள் போன்ற உற்பத்தி செய்ய முடியாத தயாரிப்புகளை சீனா போன்ற அளவில் உற்பத்தி செய்யும் திறனில் இந்தியா சிறந்து விளங்குகிறது.
எளிமையாகச் சொன்னால், இந்தியாவின் சக்தி வளரும்போது சீனாவின் வளர்ச்சி குறைந்து விடும் என தெரிவித்தார்.























