• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சார் நீங்க வேணா இப்ப நேரா போய் என்.எஸ்.கே யைப் பாருங்க

சினிமா

கலைவாணரது நிறுவனத்தின் கணக்குகளைச் சரிபார்த்து விட்டு வருமான வருவாய் அதிகாரி
ஹனுமந்தராவ், கணக்குகளை கொண்டு வந்தவரிடம், “என்னய்யா நோட்டுல நிறையத் தடவை தர்மம், தர்மம் -னுகணக்கு எழுதிருக்கு. இதை நான் எப்படி நம்புறது?” என்று கேட்க, என்னெனவோ கூறியும் அவர் நம்பாததால், “சார் நீங்க வேணா இப்ப நேரா போய் என்.எஸ்.கே யைப் பாருங்க. உங்களை யாருன்னு சொல்லிக்காம, உங்கமகள் கல்யாணத்துக்கு வேணும்னு பணம் கேளுங்க. தர்றாரா இல்லையா பாருங்க” எனச் சொல்ல, அதிகாரி ஹனுமந்த ராவ் அதே போல் போய் ஆயிரம் ரூபாய் தன்னுடைய மகளின் கல்யாணத்துக்கு வேண்டும் எனக்கேட்டுள்ளார். அதைக் கேட்ட என்.எஸ்.கே. பணம் தர ஏற்பாடு செய்ய, அதைப் பார்த்து விட்டு ஆச்சரியமான ஹனுமந்த ராவ், “ஐயா கிருஷ்ணா, உனக்கு உங்க அப்பா தப்பான பேர் வச்சிட்டார். உனக்கு கர்ணன்னுதான் பேர்வச்சிருக்கணும். பணம் தர்மம் தருவெதெல்லாம் சரி. இனியாவது அதுக்கு ஒரு வவுச்சர் வாங்கிக்குங்க” என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.
சொந்தமாகப் படம் தயா‌ரிக்கத் தொடங்கிய பிறகு கலைவாணருக்கு வாய்ப்புகள் குறைந்தன. செலவு இருமடங்கானது. ஆனாலும், கலைவாணரைத் தேடி உதவி பெற்று செல்கிறவர்கள் குறையவில்லை. தன்னிடம்இல்லாதபோது பிற‌ரிடம் கடன் வாங்கி உதவிகளை‌த் தொடர்ந்தார். இறுதிவரை அவரது உதவி செய்யும் குணத்தை தோல்விகளால் தடுக்க முடியவில்லை.

ஒரு கட்டத்தில் கொடுத்துக் கொடுத்தே வறுமையாளராகிவிட்டார் கலைவாணர். அப்போது அவரிடம் வேலை செய்த ஒருவர், ‘எனக்குத் திருமணம்’ என்று வந்து நிற்கிறார். கலைவாணர் சுற்றும் முற்றும் பார்த்தபோது கண்ணில்பட்டது. ஒரு வெள்ளி கூஜா. அதை எடுத்துக் கொடுத்து, ‘இதை விற்றுத் திருமணச் செலவுக்கு வைத்துக்கொள்’ என்றார்! இது கலைவாணரின் வள்ளல்
தன்மைக்குச் சான்றாக அமைந்த நிகழ்ச்சியாகும்.
கலைவாணர் தீராத வயிற்று வலியால் மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எம்.ஜி.ஆர். வெளியூரில் இருந்ததால் அவரால் உடனே வந்து பார்க்க முடியவில்லை. என்.எஸ்.கே-வே எம்.ஜி.ஆருக்கு ‘தம்பி ‘நீ என்னைக் காணவராவிட்டால், பத்திரிகைகள் உன்னைப்பற்றித் தவறாக எழுதும். நீ எனக்கு செய்த உதவியை நான் அறிவேன். அதனால் என்னை வந்து பார்த்துவிட்டுப் போ’ என்று எழுதினார்.
கலைவாணரைப் பார்க்க எம்.ஜி.ஆர். வரும்போதெல்லாம் நிறையப் பணக் கட்டை அவர் படுக்கைக்குக் கீழ் வைத்துவிட்டுச் செல்வார். ஏனெனில் பலருக்குக் கொடுத்துச் சிவந்த கரங்கள் தனது ஏழ்மைக்காகப் பிறரிடம் கைநீட்டக் கூடாது என்ற உயரிய நோகத்துடனே எட்டாவது வள்ளலாகத் திகழ்ந்த மக்கள் திலகம் இவ்வாறு செய்தார்.
இதனைப் பார்த்த கலைவாணர், எம்.ஜி.ஆரைப் பார்த்து, “தம்பி ராமச்சந்திரா, நீ எனக்குப் பணமாத்தராம காசா மாத்திக் கொடு. இங்கே இருக்க ஏழைகள் எல்லாருக்கும் அப்பதான்
அதை நான் தர முடியும்” என்று கூறினார். இதனைக் கேட்ட மக்கள் திலகம் நெஞ்சம் நெகிழ்ந்துவிட்டார். தன்னைப் பார்க்க வருவோர் வாங்கி வரும் பழங்கள், ஹார்லிக்ஸ் இவற்றையும் கூட மற்ற ஏழைகளுக்குக் கொடுத்து விடுவாராம் என்.எஸ்.கே.
 

 

Leave a Reply