60 வது இராணுவ தடகள சாம்பியன்ஷிப் போட்டி வெற்றிகரமாக நிறைவு
இலங்கை
2025 ஆகஸ்ட் 18 அன்று தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் ஆரம்பமான 60 வது இலங்கை இராணுவ தடகள சாம்பியன்ஷிப் போட்டி 2025 ஆகஸ்ட் 20 அன்று வெற்றிகரமாக நிறைவடைந்தது.
இப்போட்டியில் இராணுவத்தின் பல்வேறு படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி 600க்கும் மேற்பட்ட வீர வீராங்கனைகள் தடகள மற்றும் உள்ளக போட்டிகளில் போட்டியிட்டனர்.
இலங்கை தடகள சங்கத்தின் மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட்ட இப்போட்டியில், இராணுவ வீர வீராங்கனைகள் ஒரு தேசிய சாதனையையும், ஒரு இலங்கை இராணுவ தடகள சாதனையையும் மற்றும் 11 புதிய போட்டி சாதனைகளையும் நிலைநாட்டினர்.
இப்போட்டியின் பரிசளிப்பு விழாவில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இப்போட்டியில் இலங்கை மின்சார மற்றும் இயந்திரப் பொறியியல் படையணி ஆண்களுக்கான ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை வென்றதுடன், இலங்கை இராணுவ பீரங்கி படையணி இரண்டாவது இடத்தைப் பெற்றது.
இலங்கை இராணுவ மகளிர் படையணி பெண்களுக்கான சாம்பியன்ஷிப்பை வென்றதுடன், இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
இப்போட்டியில், 200 மீட்டர் ஓட்டப் போட்டியை 20.52 செக்கனில் நிறைவுசெய்து, இலங்கை இராணுவ பீரங்கிப் படையணியை சேர்ந்த பணிநிலை சார்ஜன் அருண தர்ஷன சிறந்த வீரராகத் தெரிவு செய்யப்பட்டதுடன் 400 மீட்டர் ஓட்டப் போட்டியை 52.86 செக்கனில் நிறைவுசெய்து, புதிய போட்டி சாதனையுடன், இலங்கை இராணுவ மகளிர் படையைச் சேர்ந்த சார்ஜன் நதீஷா ராமநாயக்க சிறந்த வீராங்கனையாக கௌரவிக்கப்பட்டார்.






















