விண்வெளியில் பூத்த தங்க மலர்- பேரழிவுகளைக் கூர்ந்து கவனிக்கிறது
பூமியின் மேற்பரப்பு மாற்றங்களை கண்காணிப்பதற்காகவும், பருவநிலை மாற்றங்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யவும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றும் அமெரிக்காவின் நாசா கூட்டு முயற்சியில் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பில் நிசார் செயற்கைக்கோள் தயாரிக்கப்பட்டது. 2 ஆயிரத்து 392 கிலோ எடை கொண்ட நிசார் செயற்கைக்கோள் கடந்த மாதம் 30-ந் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது.
5 ஆண்டுகள் ஆயுட்காலத்தை கொண்ட இந்த செயற்கைக்கோளில் எல்-பேண்ட் மற்றும் எஸ்-பேண்ட் ஆகிய இருவேறு வகை 'சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார்' என்ற நவீன தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்தநிலையில் விண்ணில் ஏவப்பட்டு 17 நாட்களுக்கு பிறகு செயற்கைக்கோளில் இருந்த 12 மீட்டர் நீளம், 64 கிலோ எடை கொண்ட ஆன்டெனா விரிந்து பணியை தொடங்கி உள்ளது. இதற்கு விஞ்ஞானிகள் 'தங்க மலர்' என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த ஆன்டெனா திறந்தபோது, விண்வெளியில் தங்க மலர் பூத்ததுபோல் இதழ்கள் ஒவ்வொன்றாக விரிந்தது. இதிலுள்ள 123 இலகுரக எந்திரக் கட்டமைப்புகள் அதற்கு வலிமையைக் கொடுக்கின்றன. தொடர்ந்து பேரழிவுகளைக் கூர்ந்து கவனிக்கிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.
இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:-
பூமியின் மேற்பரப்பில் 10 மீட்டர் வரையிலான மாற்றங்களையும் படம் பிடிக்க முடியும். பகல் அல்லது இரவு, மழை, மேகம் அல்லது மூடுபனி என எந்த சூழ்நிலையிலும் தொடர்ந்து செயல்படும். இது ஒவ்வொரு 12 நாட்களுக்கும் ஒரு முறை முழு பூமியின் வரைபடத்தையும் தயாரிக்கிறது. இது காலப்போக்கில் பூமியில் நிகழும் மாற்றங்களைப் பற்றிய 3டி திரைப்படம் போன்ற ஒரு பார்வையை விஞ்ஞானிகளுக்கு வழங்கும்.
இந்த ஆன்டெனாவில் மிகவும் சக்தி வாய்ந்த செயற்கை துளை ரேடார் தொழில்நுட்பம் உள்ளது. சாதாரண சூழ்நிலைகளில், இந்த ஆன்டெனா ஒரு குறிப்பிட்ட வரம்பில் செயல்படுகிறது. இது 19 கிலோமீட்டர் நீளமுள்ள இடத்தில் பணியை தொடங்கியுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
துல்லியமாக கணிக்கலாம்
இஸ்ரோ செயற்கைக்கோள் மைய இயக்குனர் சஞ்சய் சர்மா கூறும்போது, 'ஆன்டெனா முழுமையாக விரிவடைந்து ஒரு தங்கப் பூவைப் போல பூத்தபோது, இந்த தருணம் தொழில்நுட்ப ரீதியாக மட்டுமல்ல, உணர்ச்சிகரமாகவும் இருந்தது. பல ஆண்டு கால கடின உழைப்பின் பலனை அந்த தருணத்தில் நாங்கள் பெற்றோம்' என்றார்.
இதுகுறித்து நாசா திட்ட விஞ்ஞானி ரோசாலி வேகா கூறுகையில், 'நிசார் செயற்கைக்கோள் காலநிலை நெருக்கடி மற்றும் இயற்கை பேரழிவுகளை முன்பைவிட துல்லியமாக கணிக்க உதவும்' என்றார்.





















