ஒன்ராறியோ-ரொறன்ரோ இணைந்து போக்குவரத்து அருகில் அதிக வீடுகள் உருவாக்கத் திட்டம்
கனடா
ஒன்ராறியோ அரசும் ரொறன்ரோ மாநகர சபையும் இணைந்து பேருந்து, தொடரி நிலையங்கள் மற்றும் நிலக்கீழ் வழித்தடங்களுக்கு அருகில் அதிக வீடுகளைக் கட்டவுள்ளன. இத்திட்டம் 120 போக்குவரத்து நிலையங்களுக்கு அருகில், குறிப்பாக ஸ்காபரோப் பகுதிகளில், உயரமான, அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டுவதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுக்கும்.
இதனடிப்படையில் ரொறன்ரோவில் வரும் 25 ஆண்டுகளில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான புதிய வீடுகள் அமைக்கப்படலாம். இதனால் குடியிருப்பாளர்கள், புதிதாகக் குடியேறுபவர்கள் மற்றும் இளையோர், கல்விக்கூடங்களுக்கும் வேலைத்தளங்களுக்கும் அருகில் வசிக்க வழியேற்படும்.
இதுபற்றி அமைச்சர் விஜய் தணிகாசலம் கூறுகையில், "போக்குவரத்தின் முக்கியத்துவத்தையும், அதுவே மக்களை அவர்கள் இல்லங்களிலிருந்து அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுடன் இணைப்பதற்கு இன்றியமையாதது என்பதையும்
எமது அரசு அறிந்துள்ளது" என்றார்.
ஸ்காபரோவிலுள்ள முக்கிய போக்குவரத்து நிலையங்களுக்கு அருகில் கட்டப்படவுள்ள குடியிருப்புகளால் பொதுமக்கள் பயனடைவர். ஸ்காபரோ நிலக்கீழ் வழித்தட நீட்டிப்பில் மூன்று புதிய நிலையங்கள் அமையவுள்ளன. அவையாவன: லோரன்ஸ் கிழக்கு, ஸ்காபரோ மத்தி, மற்றும் ஷெப்பேட் கிழக்கு. இத்திட்டத்தினூடக பயண நேரம் குறைவடைவதுடன் குடியிருப்புக்கு அருகிலேயே வேலைவாய்ப்புகளையும் கடைகள், வணிகங்கள் போன்றவற்றையும் உருவாக்க உதவும்.
இக்குடியிருப்பு மற்றும் போக்குவரத்துத் திட்டங்கள், எதிர்காலத்தில் ஸ்காபரோவை வலுவானதும் குறைந்த செலவுடைய அனைத்துடனும் இணைந்த சமுகமாகவும் மாற்ற வல்லன.






















