அதிபர்கள் உயர்வான தலைமைத்துவத்தை பாடசாலைகளுக்கு வழங்கவேண்டும்- ஆளுநர் நா.வேதநாயகன்
இலங்கை
‘தூய்மை இலங்கை’ செயற்றிட்டத்தின் ‘இதயபூர்வமான யாழ்ப்பாணத்துக்கு’ என்னும் தலைப்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற க்ளீன் ஸ்ரீலங்கா செயற்திட்டத்தின் ஓர் அங்கமாக, யாழ். மாவட்டப் பாடசாலை அதிபர்களுக்கான விழிப்புணர்வுச் செயலமர்வு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.
குறித்த செயலமர்வில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர், தூய்மை இலங்கை செயற்றிட்டத்தின் உதவிப் பணிப்பாளர், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரின் இணைப்பாளர், யாழ். இந்துக் கல்லூரி அதிபர், யாழ். மாவட்ட பாடசாலைகளின் அதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அந்தவகையில் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர்
நா.வேதநாயகன்” நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த முனையும்போது கடினமான செயற்பாடாக தெரிந்தாலும் அனைவரும் ஒன்றிணைந்து விடாமுயற்சியுடன் முயன்றால் அந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும்” என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் ஒவ்வொரு பாடசாலை அதிபரும் சிறந்த தலைமைத்துவப் பண்புகளுடன் உயர்வான தலைமைத்துவத்தை பாடசாலைகளுக்கு வழங்கவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்கம் வடக்கில் மூன்று விடயங்களில் பிரதானமாக கவனம் செலுத்தியுள்ளது. குறிப்பாக வறுமைத்தணிப்பு, எண்ணிமம்படுத்தல் (டிஜிட்டல் மயமாக்கல்), தூய்மை இலங்கை என்ற அந்த மூன்று விடயங்களில் தூய்மை இலங்கை என்ற செயற்றிட்டம் மிகப் பிரதானமாக அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
























