• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மக்கள் திலகம் எம்ஜிஆர் முதல்முறையாக முதல்வராக இருந்த நேரம்

சினிமா

மக்கள் திலகம் எம்ஜிஆர் முதல்முறையாக 1977-ல் ஆட்சியைப் பிடித்து முதல்வராக இருந்த நேரம். எதிர்க்கட்சித் தலைவராக திமுக தலைவர் கருணாநிதி. சட்டப் பேரவையில் சூடும் சுவையுமான ஒரு விவாதம். ஒரு கட்டத்தில் கருணாநிதி பேசும்போது, ‘‘ஆட்சி அதிகாரம் எங்களுக்கு புதிதல்ல. நாங்கள் சாப்பிட்டுப் போட்ட எச்சில் இலைதான் அது’’ என்றார். எம்.ஜி.ஆர். எழுந்தார். தனக்கே உரிய டிரேட் மார்க் புன்னகையுடன் சொன்னார், ‘‘நீங்கள் எவ்வளவு சாப்பிட்டீர்கள் என்று கணக்கு பார்க்கத்தான் நாங்கள் ஆட்சிக்கு வந்திருக்கிறோம்.’’

இப்படி, அரசியல் களத்திலே எதிரெதிரே நின்று விவாதங்களில் ஈடுபட்டாலும் அறிஞர் அண்ணாவின் தம்பிகளான இரண்டு பேருக்கும் இடையே அரசியலைத் தாண்டிய ஆழமான நட்பு நிலவி வந்தது. தனது நாற்பதாண்டு கால நண்பர் என்று எம்.ஜி.ஆரை கருணாநிதி குறிப்பிடுவார். எம்.ஜி.ஆரும் மேடைகளில் ‘நண்பர் கலைஞர் கருணாநிதி’ என்றே விளித்து பேசுவார்.

அரசியல் உக்கிரம் தகித்த போதும் அதையும் தாண்டிய நட்பு குளிர்ச்சி இருவருக்கும் இடையே நிலவியதற்கு சான்றுகள் ஏராளம். அதில் ஒரு சம்பவம்.

எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுக அரசைக் கண்டித்து 1982-ம் ஆண்டு ‘நீதிகேட்டு நெடும் பயணம்’ என்ற பெயரில் மதுரையில் இருந்து திருச்செந்தூருக்கு திமுக தலைவர் கருணாநிதி தொண்டர்களுடன் பாத யாத்திரையாக சென்றார். தொடர்ந்து நடந்ததில் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது. காலில் கொப்புளங்கள் ஏற்பட்டன. அப்படியும் பயணத்தை தொடர்ந்தார்.

விஷயம் முதல்வர் எம்.ஜி.ஆரின் கவனத்துக்குச் சென்றது. உடனடியாக தொலைபேசி மூலம் கருணாநிதியை தொடர்பு கொண்டார். உடல் நலன் குறித்து அக்கறையோடு விசாரித்தார். அதோடு, கருணாநிதியின் உடல் நிலையை கவனிக்க ஒரு மருத்துவர் குழுவையும் அனுப்பி வைத்தார். இது இருவருக்குமான நட்பின் அடையாளம் மட்டுமல்ல, தனது அரசை எதிர்த்து பாத யாத்திரை போகிறாரே? தனது அரசியல் எதிரியாயிற்றே? என்றெல்லாம் கருதாமல் கருணாநிதியின் உடல் நலனில் எம்.ஜி.ஆர். கொண்ட அக்கறையையும் அவரின் அன்பு உள்ளத்தையும் காட்டும் நிகழ்ச்சி இது.

- தி இந்து 

Leave a Reply