ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த உதயாவின் அக்யூஸ்ட் படக்குழு
சினிமா
ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என். பன்னீர் செல்வம், எம். தங்கவேல் ஆகியோரின் தயாரிப்பில், பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் ஆகஸ்ட் 1 அன்று வெளியான 'அக்யூஸ்ட்' திரைப்படம் ரசிகர்களின் பேராதரவுடன் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த வெற்றிக்கு வித்திட்ட ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் 'அக்யூஸ்ட்' படக்குழுவினர் விழா ஒன்றினை சென்னையில் ஒருங்கிணைத்தனர்.
இந்த விழாவில் படக்குழுவினருடன் தயாரிப்பாளர்கள் ஏ. எல். அழகப்பன், அழகன் தமிழ்மணி, சௌந்தர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் தயா என். பன்னீர்செல்வம் பேசுகையில், ''இப்படத்தின் வெற்றிக்கு தற்போது வரை கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கும் நாயகனும், நண்பணுமாகிய உதயாவிற்கு நெஞ்சார்ந்த நன்றி. இந்த வெற்றி அவரை தான் சாரும். படத்தின் தொடக்கத்திலிருந்து தற்போது வரை அனைவரையும் அரவணைத்து ஒருங்கிணைத்து வழிநடத்திச் செல்வது அவர் தான். தற்போது வரை இந்த படத்தின் வெற்றியை அவர் தன் தலை மீது ஏற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து எங்களின் நலன்களுக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து நல்ல திரைப்படங்களில் நடித்து தொடர்ந்து வெற்றி பெற வேண்டும் என்பது தான் அவரது நோக்கம். அவரது நோக்கம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ் பேசுகையில், ''இந்தப் படத்தில் உழைத்த நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரின் பின்னணியில் ஒரு குட்டி கதை இருக்கிறது. இப்போது அதைப் பற்றி விரிவாக பேச இயலாது. இருப்பினும் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த 'அக்யூஸ்ட்' திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த ஊடகத்தினருக்கும், வெற்றி பெற செய்த ரசிகர்களுக்கும் முதலில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.























