• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிறந்த குணம் சித்தத்தில் வருவது அல்ல... ரத்தத்தில் ஊறி வருவது.

சினிமா

முதன்முதலில் எம்.ஜி.ஆருக்கு கதை சொல்ல நான் சென்ற போது அவரது விருந்தோம்பல் குணத்தை அனுபவிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
‘தாய் சொல்லை தட்டாதே’ படத்தின் கதையை எம்.ஜி.ஆரிடம் சொன்ன போது இன்டர்வெல் வரை வசனத்தை படித்தேன். அது முடிந்து அடுத்த பைலை எடுத்த போது...
எம்.ஜி.ஆர். தனது கைக்கடிகாரத்தைப் பார்த்தார்.
அவர் பார்ப்பதற்கும் ராயப்பேட்டை வீட்டிலிருந்து ஜானகி அம்மாள்அனுப்பிய இரண்டு சாப்பாட்டு கேரியர்களை டிரைவர் கொண்டு வந்து மேஜையில் வைப்பதற்கும் நேரம் சரியாக இருந்தது.

‘அண்ணே, சாப்பிட்டுட்டு கொஞ்சம் ஓய்வெடுத்துக்கிட்டு அப்புறம் மீதியைக் கேக்கலாம்’ என்று சொல்லி விட்டு எம்.ஜி.ஆர் எழுந்து சென்று சாப்பாட்டுக் கேரியர்களின் எல்லாக் கிண்ணங்களையும் எடுத்துத் துருவித் துருவிப் பார்த்து விட்டு வந்து தொலைபேசி எண்களைச் சுழற்றினார்.
‘ஜானு! தேவரண்ணன், ஆசிரியரெல்லாம் என்னோட சாப்பிடுறாங்கன்னு ஒங்கிட்டே சொன்னேன்ல! வீட்டுல செஞ்சதோட பொன்னுச்சாமி ஓட்டலேருந்து இன்னும் நிறையா அயிட்டங்கள் வாங்கி அனுப்புனா என்னா?’
மறுமுனையில் ஜானகி அம்மாவிடமிருந்து ஏதோ பதில் வர எம்.ஜி.ஆர், தொடர்ந்தார்.
‘எது? நான் சொல்லலியா? சொல்லித்தான் ஒனக்குத் தெரியணுமா?. அங்கே காடை வறுவல் மட்டன் கோலாவெல்லாம் இருக்கும்லே.. உம் சரி சரி’ என்று சொல்லி ‘பட்’ என்று ரிஸீவரை வைத்து விட்டு அண்ணனை சாப்பிட அழைத்தார்.
இவ்வளவுக்கும் மட்டன் வறுவல், கோழிக்குருமா, மீன் குழம்பு, மீன் வறுவல், ஆம்லெட் முதலிய நிறைய அயிட்டங்களை அம்மா அனுப்பியிருந்தார்கள்.
அன்றைய நாட்களில் ராயப்பேட்டையில் புகழ் பெற்றிருந்த பொன்னுசாமி மிலிட்டரி ஓட்டலின் காடைக் கறியும், கறிக்கோலாவும் இல்லை என்ற குறை, எங்களுக்கு அல்ல எம்.ஜி.ஆருக்கு இருந்தது போலும்.
பிற்காலத்தில் எம்.ஜி.ஆர் தமிழகத்தின் முதல்வராக மட்டும் அல்ல விருந்தோம்பலிலும் முதல்வராக விளங்கினார்.
அவர் வீட்டில் கை நனைக்காத சினிமா கலைஞர்களோ, அரசியல் பிரமுகர்களோ யாரும் இல்லை. இந்த உண்மையை அவரோடு பழகிய அனைவரும் அறிவர். நானும் நன்கு அறிவேன்.
சாப்பிடுவதில் மட்டும் அல்ல, சாப்பிட வைப்பதிலும் அவருக்கு நிகர் அவரேதான்.
இந்தச் சிறந்த குணம் சித்தத்தில் வருவது அல்ல... ரத்தத்தில் ஊறி வருவது.

 

-திரு .ஆரூர்தாஸ் பதிவிலிருந்து!
 

Leave a Reply