உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது
இலங்கை
பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் இன்று முழுமையான அரசியலாகிவிட்டது. குண்டுத்தாக்குதல்கள் பற்றி போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்ற போது கிழக்கு மாகாண கட்டளைத் தளபதியாக செயற்பட்டார்.
இவர் தனது பதவிக்கான பொறுப்பில் இருந்து விலகியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இவ்வாறு குற்றச்சாட்டுக்குள்ளானவரை பதவியில் வைத்துக்கொண்டு எவ்வாறு சுயாதீனமான முறையிலான விசாரணைகளை முன்னெடுக்க முடியும் எமக்கு இதில் பாரிய சந்தேகம் காணப்படுகிறது.
ஆகவே இவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்போம். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் கிடைத்த புலனாய்வுத் தகவல்களை கொண்டு எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காமல் அவற்றை அலுவலக மேடையில் பத்திரப்படுத்தி வைத்தவர்களே, இந்த அரசாங்கத்தில் உயர் பதவிகளில் உள்ளார்கள். அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு நாமல் ராஜ பக்ஷ தெரிவித்துள்ளார்.






















