சுற்றுலாப் பயணிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்கும் திட்டம்- நாமல் விசனம்
இலங்கை
நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்கும் அரசாங்கத்தின் திட்டம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பல கேள்விகளை முன்வைத்துள்ளார்.
தனது எக்ஸ் தளத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள அவர் ”விடயத்துடன் தொடர்புடைய சகல தரப்பினருடனும் கலந்தாலோசிக்காமல் சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்கும் அரசாங்கத்தின் திட்டம் எவ்வாறு எட்டப்பட்டது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன் சுற்றுலாத் துறையை நம்பி, ஆயிரக்கணக்கான சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் வாடகை வாகன சாரதிகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ள அரசாங்கத்தின் இந்த முடிவு முறையான ஆலோசனை இல்லாமல் செயல்படுத்தப்பட்டால் அவர்களின் வாழ்வாதாரம் அச்சுறுத்தலுக்குள்ளாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளவர்களை, இலங்கையில் வாகனம் செலுத்த அனுமதிக்கும் ஒரு ஒப்பந்தம் இலங்கையில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளதாக நாமல் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இந்த திட்டம் அவர்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட வேண்டும் என்றும் இது தொடர்பாக சுற்றுலா தொழில்துறையில் உள்ள பலரிடமிருந்து தனக்கு பல முறைப்பாடுகள் வந்துள்ளதாகவும், இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பு கவனமாக பரிசீலிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மேலும் வலியுறுத்தியுள்ளார்.






















