வவுனியாவில் கல்வி நிலையத்திற்கு சென்ற மாணவி சடலமாக மீட்பு
இலங்கை
வவுனியாவில் உள்ள தனியார் கல்வி நிலையமொன்றின் கிணற்றில் இருந்து மாணவி ஒருவர் நேற்று (11) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையத்தில், உயர்தர வர்த்தகப் பிரிவில் கல்வி கற்கும் மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
2025ஆம் ஆண்டு உயர்தர வர்த்தகப் பிரிவில் கல்வி பயின்ற மாணவி, நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால், பெற்றோரும் உறவினர்களும் அவரைத் தேடியுள்ளனர்.
தேடுதலின்போது, மாணவியின் புத்தகப்பை மற்றும் துவிச்சக்கர வண்டி கல்வி நிலையத்தில் காணப்பட்டன.
மேலும், கல்வி நிலைய வளாகத்தில் உள்ள கிணற்றருகே மாணவியின் செருப்பு இருந்தது கண்டறியப்பட்டது.
சம்பவத்தை அடுத்து பெற்றோர் மற்றும் கல்வி நிலைய நிர்வாகத்தினர் வவுனியா பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததுடன் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், மாநகர சபையினர், கிராம அலுவலர், கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து, 40 அடி ஆழமுள்ள கிணற்றில் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்ட நிலையில் மாணவியை சடலமாக மீட்டனர்.
சடலமாக மீட்கப்பட்ட மாணவி வவுனியா, கோமரசன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்த மாணவியின் சடலம் உடற்கூறு பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
























