• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அமைச்சர் குமார ஜயகொடி இலங்கை – சவூதி அரேபிய நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராகத் தெரிவு

இலங்கை

பத்தாவது நாடாளுமன்றத்தின் இலங்கை – சவூதி அரேபிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக கௌரவ வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கை – சவூதி அரேபிய நாடாளுமன்ற நட்புறவுச்சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற போதே இந்தத் தெரிவு இடம்பெற்றது. சவூதி அரேபியாவின் இலங்கைக்கான தூதுவர் கௌரவ காலித் ஹமூத் நாஸர் அல்கஹ்தானி இந்நிகழ்வில் கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்டார். அத்துடன், கௌரவ அமைச்சர்கள், கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ இலங்கை – சவூதி அரேபிய நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் செயலாளராக இதன்போது தெரிவுசெய்யப்பட்டார். இங்கு உரையாற்றிய கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன, இலங்கைக்கும் சவூதிஅரேபியாவிற்கும் இடையிலான நீண்டகால இராஜதந்திர உறவுகளை சுட்டிக்காட்டியதுடன், இலங்கையின் அபிவிருத்திப் பயணத்தில் சவூதி அரேபியா ஒரு முக்கிய பங்காளியாக இருந்து வருவதாகத் தெரிவித்தார்.

நீர், வலுசக்தி, சுகாதாரம், நீதி மற்றும் கல்வி ஆகிய துறைகளில் சவுதி அரேபிய நிதியத்தின் ஊடாக சவூதி அரேபியா மேற்கொண்டுள்ள குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை அவர் பாராட்டியதுடன், அவை இலங்கை மக்களின் வாழ்வில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். இலங்கையின் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டில் சவூதி அபிவிருத்தி நிதியத்துடன் அண்மையில் மேற்கொண்ட ஒப்பந்தம் ஒரு முக்கிய மைல்கல்லாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த சவூதி அரேபிய தூதுவர் கௌரவ காலித் ஹமூத் நாஸர் அல்கஹ்தானி – அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாசாரம் உள்ளிட்ட துறைகளில் பரஸ்பர மரியாதை மற்றும் வினைத்திறனான ஒத்துழைப்பின் அடிப்படையிலான சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பல தசாப்த கால உறவுகளை சுட்டிக்காட்டினார். அண்மைய ஆண்டுகளில், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு வலுவடைந்து வருவதாகத் தெரிவித்த அவர், நாடாளுமன்றங்களுக்கிடையிலான உயர்ந்த கலந்துரையாடல்கள் மற்றும் ஒத்துழைப்புக்கான பாலமாக நட்புறவுச்சங்கம் செயல்படும் என்பதை வலியுறுத்தினார். கல்வி, வர்த்தகம், உட்கட்டமைப்பு மற்றும் சுற்றுலா ஆகியவற்றில் கவனம் செலுத்தி, இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதாக நட்புறவுச்சங்கத்தின் புதிய தலைவர் கௌரவ அமைச்சர் குமார ஜயகொடி இதன்போது உறுதியளித்தார். இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர புரிதல், மக்களிடையேயான தொடர்புகள் மற்றும் சட்டவாக்க உரையாடலை வளர்ப்பதற்கான ஒரு தளமாக நட்புறவுச் சங்கத்தின் பங்கை அவர் சுட்டிக்காட்டினார்.
 

Leave a Reply