• Welcome to TamilsGuide
செய்திகள் 1

டிரம்ப்-புதின் சந்திப்பில் ஜெலன்ஸ்கி இணைய வாய்ப்பு

ரஷியா-உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். இதில் ரஷிய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருடன் டிரம்ப் தொலைபேசியில் பேசி இருந்தார்.

இவ்விவகாரத்தில் சமீபத்தில் அமெரிக்கா-ரஷியா இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. இதற்கிடையே போர் நிறுத்த முயற்சியின் ஒரு பகுதியாக வருகிற 15-ந்தேதி அமெரிக்காவின் அலாஸ்காவில் டிரம்ப்-புதின் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் போர் நிறுத்தம் தொடர்பாக இரு தலைவர்களும் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்கள். இதுதொடர்பாக டிரம்ப் கூறும்போது, போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக சில பகுதிகளை உக்ரைன் வழங்க வேண்டியிருக்கும். உக்ரைனுக்கு சில பகுதிகள் கிடைக்கும் என்றார்.

இதற்கிடையே உக்ரைன் தரப்பில் முத்தரப்பு பேச்சு நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. உக்ரைன் இடம்பெறாமல் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எதிர்ப்பு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, போர் நிறுத்த பேச்சு எங்கோ தொலைவில் நடக்க உள்ளது.

இந்தப் போரை எங்களைத் தவிர வேறு யாராலும் முடிவுக்கு கொண்டுவர முடியாது. உக்ரைன் இல்லாமல் எடுக்கப்படும் எந்த முடிவுகளும் அமைதிக்கு எதிரானவை. அதேபோல் எங்கள் நிலத்தை விட்டுதர மாட்டோம் என்றார்.

இந்த நிலையில் அலாஸ்காவில் நடைபெற உள்ள டிரம்ப்-புதின் பேச்சுவார்த்தையில் ஜெலன்ஸ்கி இணைய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அலாஸ்காவில் அதிபர் டிரம்பை சந்திக்க உக்ரைன் அதிபர்ஜெலென்ஸ்கிக்கு அழைப்பு விடுப்பது குறித்து வெள்ளை மாளிகை பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அழைப்பு விடுக்கும்பட்சத்தில் அதை ஏற்று ஜெலன்ஸ்கி சென்றால் அவருடன் டிரம்ப் தனியாக பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டேன் என்று புதின் கூறிஉள்ளார். இதனால் அவர்கள் இடையே சந்திப்பு நடைபெற வாய்ப்பு இல்லை.
 

Leave a Reply