புதிதாக குற்றச்செயல்களில் ஈடுபடும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கை
இதுவரை குற்றச் செயல்களில் ஈடுபடாத இளைஞர்கள் அவ்வாறான செயல்களில் ஈடுபடுவது தற்போது அதிகரித்து வருவதாக இலங்கை பொலிஸ் பயிற்சி கல்லூரியின் வெளி விரிவுரையாளரும் குற்றவியல் நிபுணருமான டி.எம்.எஸ். தம்மிக்க பண்டார தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் துப்பாக்கிச் சூடு மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வுகள் இந்த போக்கை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு மாதமும் சுமார் 40 இளைஞர்கள் புதிதாக குற்றச் செயல்களில் ஈடுபடுவதாகவும், கடந்த சில மாதங்களில் 40-50 புதிய குற்றவாளிகள் உருவாகும் நிலை பதிவாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இவர்களில் பெரும்பாலானோர் இளம் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டில் நிகழும் குற்றங்களை சர்வதேச மட்டத்துடன் ஒப்பிடும்போது, அவை குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டுவதாகவும், இது இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் சமூக வளர்ச்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
மேலும், குற்றச் செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள் ஆய்வுகளுக்குப் பின்னர் முதல் தர குற்றவாளிகளாக சிறையில் அடைக்கப்படுகின்றனர் எனவும் இது சமூகத்திற்கும் நாட்டிற்கும் பயங்கரமான பேரிழப்பாகும் எனவும் ஒரு நிரபராதியை சிறையில் அடைத்து, மறுவாழ்வு செய்யும் செயல்பாட்டில், அவர் சமூகத்தில் பெயர் தெரியாத நபராக மாறுகிறார் எனவும் இது நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக உள்ளது, எனவும் தம்மிக்க பண்டார கவலை தெரிவித்தார்.
குறிப்பாக, இலங்கை பொருளாதார ரீதியாக நிலையற்ற தன்மையில் இருந்து மீண்டு வரும் இந்த சூழலில், குற்றச் செயல்களின் அதிகரிப்பு நாட்டிற்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய பாதகமாக அமையும் என்றும் அவர் வலியுறுத்தினார்.























