• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜனாதிபதியின் வெற்றிகரமான பயணத்திற்கு அவுஸ்திரேலியா தொடர்ந்து ஆதரவளிக்கும்

இலங்கை

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தெளிவான தலைமையின் கீழ் வெற்றிகரமான பயணத்திற்கு அவுஸ்திரேலியா தொடர்ந்து ஆதரவை வழங்க தயாராகவுள்ளதாக அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜோய் மோஸ்டின் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜோய் மோஸ்டின் (Samantha Joy Mostyn), ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை அவரது அலுவலகத்தில் நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான 75 ஆண்டுகளுக்கும் மேலான நட்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், இரு நாடுகளின் பரஸ்பர நன்மைக்காக தற்போதுள்ள ஒத்துழைப்புத் துறைகளை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டன.

குறிப்பாக இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்த தேவையான ஆதரவை வழங்க அவுஸ்திரேலியா தயாராக உள்ளது என்றும் அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் தெரிவித்தார். சுனாமி பேரழிவு மற்றும் இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியின் போது அவுஸ்திரேலிய அரசாங்கம் நேரடியாகவும்,
சர்வதேச நிறுவனங்கள் மூலமாகவும் வழங்கிய ஆதரவை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இந்தப் பயணம் அவுஸ்திரேலியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நட்பை மேலும் வலுப்படுத்தும் என்று தெரிவித்தார்.

இதேவேளை இலங்கையின் பொருளாதாரம், கல்வி, பாதுகாப்பு, சுற்றுலா மற்றும் கடல்சார் விவகாரங்களில் அவுஸ்திரேலியாவிடமிருந்து கிடைத்த ஆதரவிற்கு ஜனாதிபதி இதன்போது பாராட்டு தெரிவித்தார்.
அதிக எண்ணிக்கையிலான இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் தொழில் பயிற்சிக்கான மையமாக அவுஸ்திரேலியா மாறியுள்ளதாக கூறிய ஜனாதிபதி, இந்த துறைகளில் அவுஸ்திரேலியாவின் அனுபவங்களிலிருந்து இலங்கை அதிகம் கற்றுக்கொள்ள முடியும் என்றும்,அந்த அனுபவங்களை வெற்றிகரமாக பகிர்ந்து கொள்ள இலங்கை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

அவுஸ்திரேலிய முதலீட்டாளர்களுக்கு இலங்கையில் மிகவும் சாதகமான சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கடந்த 06ஆம் திகதி நாட்டிற்கு வருகை தந்த அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு விஜயம் செய்ய உள்ளதோடு பண்டாரகம, மிரிஸ்ஸ மற்றும்
வெலிகம போன்ற பகுதிகளில் அவுஸ்திரேலியாவின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படும் பல திட்டங்களைக் கண்காணிக்க உள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
 

Leave a Reply