இம்ரான் கானை விடுவிக்ககோரி பாகிஸ்தானில் வெடித்த போராட்டம் - 500-க்கும் மேற்பட்டோர் கைது
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சித் தலைவருமான இம்ரான் கான் ஊழல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் 2023 முதல் சிறையில் உள்ளார்.
இந்நிலையில் இம்ரான் கானை சிறையில் இருந்து விடுவிக்கக் கோரி நாடு முழுவதும் PTI கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.
பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் அரசாங்கத்திற்கு எதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டங்களின் போது போலீசார் 500க்கும் மேற்பட்ட PTI தலைவர்கள் மற்றும் தொண்டர்களை கைது செய்ததாக கட்சி வட்டாரங்கள் குற்றம் சாட்டின.
குறிப்பாக பஞ்சாப் மாகாணத்தில் அதிக எண்ணிக்கையிலான கைதுகள் நடந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
இம்ரான் கான் இரண்டு ஆண்டுகள் சிறைவாசத்தை நிறைவு செய்ததை முன்னிட்டு இந்த போராட்டங்கள் நடத்தப்பட்டதாக PTI தலைவர்கள் தெரிவித்தனர்.
அரசாங்கம் அவரது அடிப்படை உரிமைகளை பறித்துள்ளதாகவும், அவரது சட்டக் குழு அல்லது குடும்ப உறுப்பினர்கள் அவரைச் சந்திக்கக் கூட அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.























