தேசிய விருதை ஓய்வூதியமாக கருத முடியாது- தேர்வுக்குழுவுக்கு நடிகை ஊர்வசி கண்டனம்
சினிமா
2023-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன.
'உள்ளொழுக்கு' சிறந்த மலையாள படமாக தேர்வு செய்யப்பட்டு இதில் நடித்த ஊர்வசிக்கு சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் விருதை தேர்வு செய்த குழுவுக்கு (ஜூரி) நடிகை ஊர்வசி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதில், 'உள்ளொழுக்கு' படத்துக்காக எனக்கும், 'பூக்காலம்' படத்துக்காக நடிகர் விஜயராகவனுக்கும் சிறந்த துணை நடிகை, நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டன. எங்கள் இருவருக்கும் ஏன் சிறந்த நடிகர்களுக்கான விருது பகிர்ந்தளிக்கப்படவில்லை?
'பூக்காலம்' படத்தில் விஜயராகவனுக்கு ஜோடியாக நடிக்க இருந்தது நான். காலையில் 'மேக்கப்' போட ஐந்து மணி நேரம், அதை நீக்க நான்கு மணி நேரம். நீங்கள் எவ்வளவு கோடி கொடுத்தாலும் என்னை விட்டுவிடுங்கள் என்று சொன்னவள் நான். ஆனால் அந்த தியாகத்தையெல்லாம் செய்து விஜயராகவன் நடித்தார். அவரது சினிமா அனுபவத்தை தேர்வுக்குழு ஆராய்ந்திருக்க வேண்டாமா? அதற்கு ஒரு சிறப்பு விருது கொடுத்திருக்கலாமே? துணை நடிகராக ஏன் தேர்வு செய்யவேண்டும்? நாங்கள் பாடுபட்டு நடிக்கிறோம். வரி செலுத்துகிறோம். அரசு தருவதைதான் பெற்றுக்கொள்ள வேண்டும் என சொல்வது சரியல்ல.
அரசு வழங்கும் விருதை ஓய்வூதியமாக கருத முடியாது. எதற்கும் ஒரு நியாயம் வேண்டாமா?, என்று ஊர்வசி பொங்கியுள்ளார். ஊர்வசிக்கு ஆதரவாக நடிகர்-நடிகைகள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.























