செம்மணி அகழ்வுப் பணிகளில் திருப்தி உள்ளது- ஜகன் குணத்திலக
இலங்கை
”இதுவரை நடைபெற்ற செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளில் திருப்தி உள்ளது” என மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் ஜகன் குணத்திலக தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் – செம்மணி மனித புதைகுழிகள், அமைந்துள்ள சித்துபாத்து மயானத்தினை இன்று நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்கள் மற்றும் இரண்டு பணிப்பாளர்களுடன் யாழ்ப்பாண பிராந்திய அலுவலர்கள் அடங்கிய குழுவினர் இன்று செம்மணிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
மேலும் செம்மணி மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தரப்பினருடனும் குறித்த குழுவினர் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தனர்.
அத்துடன் காணாமல் போனோர் அலுவலக அதிகாரிகளுடனும் மற்றும் மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திகளுக்குமான நிலையத்தின் பிரதிநிதிகளுடனும் சந்திப்புகள் இன்று இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில் இது குறித்து மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் ஜகன் குணத்திலக கருத்துத் தெரிவிக்கையில் ” செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட்டோம். அகழ்வு பணிகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டுள்ளோம். இன்று நாம் அவதானித்த விடயங்களை நாம் அறிக்கையாக வெளியிடுவோம். கொழும்பு சென்ற பின்னர் மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவருடனும் ஏனைய ஆணையாளர்களுடன் கலந்துரையாடிய பின்னர் இந்த வார இறுதிக்குள் செம்மணி தொடர்பான அறிக்கையை நாம் வெளியிடுவோம்.
இதுவரை நடைபெற்ற அகழ்வுப்பணிகளில் திருப்தி உள்ளது. எனவே அதனை நாம் அறிக்கையில் சுட்டிக்காட்டவுள்ளோம். இங்கு நடைபெறுகின்ற வியடம் உணர்வு சார்ந்த விடயமாக காணப்படுகின்றது.
எனவே ஊடகங்கள் இதனை அறிக்கையிடும்போது இதனை உணர்வு ரீதியாக அறிக்கையிடாது, யாதார்த்தமாக செய்திகளை அறிக்கையிடுமாறு நாம் கேட்டுக்கொள்கிறோம்.
யாழ்ப்பாணத்தில் 1996ஆம் ஆண்டு தொடக்கம் 1997 ஆம் ஆண்டு கால பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு 2003ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையை மனித உரிமை ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணைத்தளத்தில் பதிவேற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம்.
செம்மணி தொடர்பாக இதுவரையில் எம்மால் எந்த அறிக்கையும் இதுவரை வெளியிடப்படவில்லை.
எனவே மிக விரைவில் அனைத்து அறிக்கைகளையும் வெளியிடுவதற்கு நாம் தயாராகவுள்ளோம் ” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






















