வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் திறப்பு
இலங்கை
நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் போக்குவரத்து வசதி கருதி சுய போக்குவரத்தை எளிதாக்கும் நோக்கில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று தொடக்கம் தற்காலிக சாரதி அனுமதி பத்திரம் வழங்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்கள் சுய போக்குவரத்திற்கான சாரதி அனுமதி பத்திரங்களை கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கு வருகைதரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையம் அல்லது அதனை அண்மித்த பகுதிகளில் வாடகை வாகனங்களை கொள்வனவு செய்து, அவர்கள் சுற்றுலா செல்வதாகவும்
இதற்காக பெரும்பாலும் மோட்டார் சைக்கிள்கள் அல்லது முச்சக்கரவண்டிகளை பயன்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் இன்று தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய முறைமையின் கீழ் இலகுரக வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை செலுத்துவதற்கான சாரதி அனுமதி பத்திரம் மாத்திரமே வழங்கப்படும் எனவும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கனரக வாகனங்கள் மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கான அனுமதி பத்திரம் வழங்கப்படமாட்டாது எனவும் வாகன போக்குவரத்து திணைக்களம் திட்டவட்டமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு அமைச்சர் பிமல் ரத்நாயக்க கருத்துத் தெரிவிக்கையில்”
நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்கள் விண்ணப்பங்களை
இந்த அலுவலகங்களில் மின்னஞ்சல் மூலம் சமர்ப்பிக்கலாம். இந்த திட்டம் பத்திரங்களை வழங்குவதற்கான நேரத்தை மேலும் குறைக்கும். சில மாதங்களில், பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் அதிகாரிகளுக்கு கையடக்கத்தொலைபேசி வழங்கப்படும் பின்னர் இந்த அலுவலகங்கள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஞசு குறியீட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
முன்னர், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கான செல்லுபடியாகும் சாரதி அனுமதி பத்திரத்தை பெறுவதற்கு வேரஹெராவில் உள்ள மோட்டார் வாகனத் திணைக்களத்தின் சாரதி உரிமக் கிளைக்குச் செல்ல வேண்டியிருந்தது, இதற்காக அவர்கள் தங்கள் பயண நேரத்திலிருந்து சில நாட்களை ஒதுக்க வேண்டியிருந்தது.
இன்று நாம் அதனை இலகுவாக்கியுள்ளோம்” இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.






















