வடமாகாணத்தில் நிலவும் கல்விசார் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்! -பிரதமர் ஹரிணி அமரசூரிய
இலங்கை
வடமாகாணத்தில் கல்வி நிலைமை பின்தங்கியுள்ளமைக்கு நிர்வாகப் பிரச்சினையே காரணமெனவும் எனவே விரைவில் இது தொடர்பில் கல்வி நிர்வாக அதிகாரிகளுடன் கலந்துரையாடி உரிய தீர்வினை பெற்றுத்தருவதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்
வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற வவுனியா மாவட்ட கல்வி நிலைமை மற்றும் கல்வி மறு சீரமைப்பு தொடர்பான தெளிவூட்டல் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட கல்விசார் திணைக்களங்கள் மற்றும் பாடசாலைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக ஆசிரியர்கள், அதிபர்கள் பற்றாக்குறை தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன் ஆசிரியர் தொழிற்சங்கங்கள், அதிபர் தொழிற்சங்கங்கள் மற்றும் கல்வி நிர்வாக அதிகாரிகள் சங்கத்தினரும் பாடசாலை மட்டங்களில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தமது கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் அவர்களது பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்த பிரதமர் அவற்றுக்கு தீர்வினை பெற்றுத்தருவதாக உறுதியளித்துள்ளார்.
ஆசிரியர் நியமனங்கள் கடந்த ஐந்து வருடங்களாக நியமிக்கப்பட முடியாமல் இருப்பதற்கு அபிவிருத்தி உத்தியோதர்களாக உள்வாங்கப்பட்டவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டதன் பின்னர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு விசாரணை நிலுவையில் இருப்பதே காரணம் எனவும் விரைவில் இதற்கான தீர்ப்பு கிடைக்கும் என எண்ணுவதாகவும் தெரிவித்துள்ளார்
அத்துடன் குறித்த தீர்ப்பினை தொடர்ந்து ஆசிரியர் நியமனங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






















