• Welcome to TamilsGuide
செய்திகள் 1

Mr. Sujatha and திருமதி .சுஜாதா

சினிமா

பொதுவாக மனைவியின் பெயரை இருட்டடிப்பு செய்து தன்னையே முன்னிறுத்திக் கொள்ளும் மனிதர்களிடையே அவரை முன்னிலைப் படுத்தி தன் பெயரை ஏறக்குறைய தொலைத்த  நம் அன்புக்குரிய ரங்கராஜன் - சுஜாதா தம்பதிகளைப் பற்றியதே இப்பதிவு.
அனுபவங்கள் மட்டுமே எழுத்துகள் ஆவதில்லை என்பதற்கு ( சுஜாதா )ரங்கராஜன் வாழ்க்கையே சாட்சி.
பிரிவோம் சந்திப்போம் போன்ற அற்புதமான காதல் கதைகளை எழுதிய இவருக்கு நடந்தது காதல் திருமணம் அல்ல. பெரியவர்களால் பார்ர்து பேசி நிச்சயிக்கப்பட்ட  டிபிகல் அர்ரேஞ்ட் மேரேஜ்!
அதென்ன டிபிகல் அர்ரெஞ்ட் மேரேஜ் ?
 சுஜாதா சாரின் தகப்பனாரும் சுஜாதாவின் தந்தையும் ஒன்றாக பணி புரிந்தவர்கள்.
சுஜாதா மூத்த சகோதரர் திருமணத்தில்  சுஜாதாவின் அப்பா கலந்து கொண்டிருக்கின்றார்.
அப்பொழுது “எனது அடுத்த பையனுக்கும் பார்த்துக் கொண்டு இருக்கின்றேன். உனக்கு ஒரு பெண் இருக்காளே.” என்கின்றார் சுஜாதா சாரின் அப்பா.
மண மேடையில் அமர்ந்து இருந்த சுஜாதா சாரின்  மன்னி வைர அட்டிகை அணிந்து இருந்தார்.
அதைச் சுட்டிக்காட்டி என்னால் “வைர அட்டிகை எல்லாம் போட முடியாது” என்கிறார் சுஜாதாவின் அப்பா.
“உன்ன பெண்தானே கேட்டேன். நகை எல்லாமா கேடேன் “என்றார் சுஜாதா சாரின் அப்பா.
அப்புறம் என்ன ?
ஜாதகம் பார்த்தார்கள்.
நிச்சயதார்த்தம் முடிந்தது.
பத்திரிக்கை அச்சடித்தும் ஆயிற்று.
 ஆனால் சுஜாதா சாரும் சுஜாதா அவர்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை.
பின்னர் ஒரு சம்பிரதாயமாக ஒரு நாள் சுஜாதா அவர்கள் வீட்டில் பெண் பார்க்கும் சம்பிரதாயம் நடக்கின்றது.
சுஜாதா சார் நல்ல உயரம்.
இவர் கொஞ்சம் ஷார்ட்.
அது கொஞ்சம் சுஜாதா சாருக்கு அதிர்ச்சிதானாம். ( திருமதி சுஜாதாவே சொன்னது ) .
அதற்கு முன்னர் போட்டோவில் மட்டுமே சுஜாதா சாரை மட்டுமே பார்த்திருந்த சுஜாதா அவர்களுக்கு யார் சுஜாதா என்று தெரியவில்லை.
 “அதோ பேண்ட் போட்டுக் கொண்டிருகாரே அவர்தான்
மாப்பிள்ளை " என்று அடையாளம் காட்டினார்களாம்.
அப்போது அவர் ரங்கராஜன் மட்டுமே.
 அதன் பின்னர்தான் அவர் சுஜாதா ஆகின்றார்.  
ரங்கராஜனை சுஜாதாவாக உலகுக்கு அடையாளம் காட்டிய சுஜாதா அவர்களுக்கு அடையாளம் காட்டப்பட்டது அன்றுதான்.
அப்புறம் என்ன ?
திருமணம். டெல்லி , பெங்களூர் , சென்னை என்று வாழ்க்கை நடந்தது.
ரங்கராஜன் தன்னை சுஜாதாவாக மாற்றிக் கொண்டது பற்றி திருமதி சுஜாதா என்ன சொல்கின்றார்.
அவர் சுஜாதா என்று பெயர் மாற்றிக் கொண்டது பற்றி...

“அவர் என் பெயரில் எழுதியது எனக்கு முதலில் தெரியாது. அப்பொழுது நான் பிரசவத்துக்காக போயிருந்தேன். அப்பொது எஸ். ரங்கராஜன்னென்ற பெயரில்தான் எழுதிக் கொண்டு இருந்தார். ஏற்கனவே குமுகத்தில் ஒரு ரங்கராஜன் இருந்ததால் வேறு பெயரை யோசித்தார். அவருக்கு இரண்டு சாய்ஸ் இருந்தது. ஒன்று கண்ணம்மா. அவருடைய அம்மா பெயர். என்னுடைய பெயர் மற்றொன்று. என் பெயர் கொஞ்சம் புதுமையாப் பட்டதால் அதை வைத்து கொண்டார். அது எனக்கு சந்தோஷம்தான். ஆனால் அவர் அம்மா பெயரை செலக்ட் செய்திருந்தாலும் எனக்கு வருத்தம் இருந்திருக்காது." என்கின்றார் திருமதி சுஜாதா.
மாப்பிள்ளை கோலம் பற்றி சுஜாதா சார்...
“பிராமண கல்யாணங்களில் மாப்பிள்ளை வேட்டி கட்டியாக வேண்டும். அதுவும் பஞ்சகச்சம். பஞ்சகச்சம் என்றால் ஐந்து இடங்களில் சொருகுவது என்று அர்த்தம். எந்த ஐந்து இடம் என்று வாத்தியாருக்கே சரியாகத் தெரியாது. எதோ ஏற்ற இறக்கமாய் முடித்து விசிறி  சொருகி ஒரு சைடு தூக்கலாகவும் மற்றது இறக்கமாகவும் கட்டிவிடுவார். கல்யாண மாப்பிள்ளைகளை செய்யும் இம்சைகளை இதுவும் ஒன்று. கோமாளி மாதிரி வேட்டி கட்டிவிட்டு கையில் விசிறி , குடை , காலுக்கு புது செருப்பு கண்ணுக்கு மை , நெற்றியிலும் கண்ணத்திலும் சாந்துப்பொட்டு , இந்த மாதிரியான அவமானங்களையும் தாங்கிக் கொள்வதன் ஒரே காரணம் அவ்வப்பொழுது கிடைக்கும் மென்மையான கரத்தின்  ( பலருக்கு முதல் ) ஸ்பரிசம்தான்.
சுஜாதா சாரைப் பற்றி திருமதி சுஜாதா...
“ரொம்ப சாப்ட் ஆனவர். இது வேணும் அது வேணும்னு எல்லாம் கேட்க தெரியாது. எதைக் கொடுத்தாலும் சாப்பிடுவார். சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் தாங்ஸ் சொல்லுவார். சின்ன சண்டைகள் வரும். ரொம்ப நேரம் இருக்காது. சூடா காப்பி கொடு. என்பார். அத்துடன் சண்டை முடிவுக்கு வந்து விடும்.  “
“ஒரே ஒரு முறை ஐஸ்வர்யா ராயைப் பார்க்க வேண்டும் என்றேன். எந்திரன் ஷூட்டிங்கிற்கு கூடிப் போனார். அவர்களோடு பேசினேன்.
பொதுவாகவே அவர் ஒரு டிடாச்ட் பர்சன். அவர் கதைகளில் வரும் சப்மிசிவ் மனைவி கேரக்டரைப் படிக்கும் பொழுது அது நானோ என்று நினைத்துக் கொள்வேன்.
அவருக்கு எழுதவும் படிக்கவும் தெரியும். குடும்ப விஷயங்களில் பெரிதாக முடிவுகளோ அபிப்ராயங்களோ சொன்னதில்லை. ..”
திருமதி சுஜாதா பற்றி சுஜாதா சார்.
எங்கள் கல்யாணம் முடிந்து முப்பத்தேழு வருடங்கள் ஆகின்றது. இன்னும் அவளை முழுமையாக புரிந்து கொண்டதாக சொல்ல முடியாது. அவ்வப் பொழுது வியப்பாக எதாவது செய்வாள். இந்த கணந்தோறும் வியப்புதான் திருமண வாழ்க்கையில் எங்களோடு வளர்ந்தது.  டெல்லியில் கல்யாணமான புதிதில் அவளை எதிர்கடைக்கு போய் ஒரு பல்பு வாங்கி வரச்சொன்னேன். நான் முன் ரூமில் உட்கார்ந்து கிராஸ் வேர்டு போட்டுக் கொண்டிருந்தேன். அவள் மாடிப்படி ஏறி வரும்பொழுது கால் தடுக்கி அதைப் போட்டு உடைத்து விட்டாள். அதை ஓடி வந்து மூச்சிரைக்க என்னிடம்  சொன்னாள். பல்பை உடைச்சு விட்டேன். கொடுத்த காசு வேஸ்ட். ..”
“நான் போனாப் போறது. வேற பல்பு வாங்கிண்டுன்டு வந்திடு “என்றேன்.
“இந்த பதில் அவள் மனதைப் பாதித்தது. கண்களில் நீருடன் அதெப்படி உங்களுக்கு இத்தனை அலட்சியம்” என்றாள்“ஏன் ? பல்பை உடைத்ததற்கு திட்டலை ? இப்படி ஒரு கோபமா ? “ என்றாள் .
எனக்கு
“வழுந்தினாள் தும்மினேனாக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று “ என்ற திருக்குறள் ஞாபகம் வந்தது.
இதனை அவர் கற்றதும் பெற்றதும் நூலில் பதிவு செய்துள்ளார். அவர் பதிவு செய்த அடுத்த வாரம்
ஒரு வாசகர் அவரை அதே பகுதியில் கேட்கின்றார். அது பற்றி..
“எனக்கு கல்யாணம் ஆகி முப்பத்தேழு வருடங்கள் ஆகிவிட்டது என்று சென்ற இதழில் சொன்னேன்.  செய்யாறிலிருந்து ஒரு வாசகர் எனக்கு ஒரு வருடத்திலேயே அலுத்துவிட்டதே. உங்கள் திருமண ரகசியம் என்னவென்று கேட்டு சுய விலாசமிட்ட கவர் அனுப்பியிருந்தார். யோசித்தால் அப்படி எதுவும் ரகசியம் இருப்பதாக தெரியவில்லை. அப்பா, அம்ம சொன்ன பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டதால் இருக்கலாம். அது இந்த காலத்துக்கு சரிபட்டு வராது. சண்டை போட்ட விஷயங்கள் தீர்ந்து போயிருக்கலாம். அதையும் வெற்றியின்   ரகசியமாக சொல்ல முடியாது .”
காரணம் எதுவாக இருக்கட்டும். அந்த தம்பதியர்கள் திருமண வாழ்வு வெற்றிகரமாகவே இருந்தது. அவரின் வெற்றிகளுக்குப் பின்னர் திருமதி சுஜாதாவின் கவனிப்பு, குடும்பத்துக்கான அவரது அர்ப்பணிப்பு எல்லாம் இருந்தது.
சுஜாதா சார் தன்னுடய கடைசி நிமிடங்களில் I lost my interest in my life என்று சொன்ன அந்த கால கட்டத்திலும் கூட தன் மகனிடம் அம்மாவை ஜாக்கிரதையா பார்த்துக்கோ “ என்று சொல்லியிருக்கின்றார். அந்த அளவு மனமொத்த தம்பதியர்களாக இருந்தவர்கள் ரங்கராஜன் -சுஜாதா தம்பதியர்.
யோசித்துப் பார்த்ததில் அவரகளின்  வெற்றிக்கு ஒரு காரணம் எனக்கு தோன்றுகின்றது.
சுஜாதா சார் திருமதி சுஜாதா தந்தையின் மீது மிகவும் மரியாதை வைத்து இருந்தார்.
திருமதி சுஜாதா சுஜாதா சார் அப்பா மீது மிகவும் மரியாதை காட்டினார்.
 இவர்களின் இந்த புரிதல் மற்ற எல்லா விஷயங்களிலும் இருந்திருக்க வேண்டும்.
இவர்களின் வெற்றிக்கு ஒருவரை ஒருவர் கொண்டாட வேண்டையதில்லை. ஒருவரை ஒருவர் அப்படியே உள்ளது உள்ளபடி ஏற்றுக்கொண்ட புரிதல் மட்டுமே காரணமாக இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகின்றது.
ஒரு ஜீனியசுக்கு மனைவியாக இருப்பது கஷ்டம் என்று பலர் சொல்லக் கேட்டு இருக்கின்றேன். சுஜாதா தம்பதியர் விஷயத்திலும் அத்தகைய இடர்கள் இருந்திருக்கலாம். இருந்தாலும் அந்த நினைவுகள் கூட இனிமையானதாக இருக்கும்.
அந்த ஜீனியஸ் சுஜாதாவாக இருக்கும் பட்சத்தில் .

 

Malathy
 

Leave a Reply