பெருந்தொகையான பீடி இலைகளை இலங்கைக்கு கடத்த முயற்சி! ஒருவர் கைது
இலங்கை
இராமநாதபுரம் மாவட்டம் வெள்ளரி ஓடை கடற்கரையில் இருந்து, இலங்கைக்கு கடத்துவதற்காக லொறியில் கொண்டு வரப்பட்ட 2,250 கிலோகிராம் பீடி இலைப் பொதிகள் கியூ பிரிவுப் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டன.
இன்று (30) அதிகாலை, இராமநாதபுரம் அருகே கடல் வழியாக பீடி இலை பொதிகள் சட்டவிரோதமாக கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கியூ பிரிவு பொலிஸார் திடீர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, ஒரு லொறியில் இருந்து பீடி இலைகளை படகில் ஏற்றிக்கொண்டிருந்த இருவர், 10 மூட்டைகள் எடுத்துக் கொண்டு கடல் வழியாக தப்பினர்.
இச் சம்பவத்தில் பீடி இலை ஏற்றிக்கொண்டு வந்த லொறியை பொலிஸார் பறிமுதல் செய்ததுடன், சந்தேகத்தின் பேரில் வெள்ளரி ஓடை பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரை கைது செய்து, அவரை இராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இந்நிலையில், கடல் வழியாக தப்பிச் சென்ற இருவரை கண்டறிந்து பிடிக்கக்கூடிய வகையில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் இலங்கைக்கு மிக அருகிலுள்ள காரணத்தால், இப்பகுதியில் இருந்து பல்வேறு பொருட்கள் சட்டவிரோதமாக கடத்தப்படுவது தொடர்ந்து பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






















