• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மெளனித்த பொழுது  P.S சுதாகரனின் நெறியாள்கையிலான இத்திரைப்படத்தைப் பார்த்து ரசித்தேன். 

இலங்கை

மெளனித்த பொழுது  P.S சுதாகரனின் நெறியாள்கையிலான இத்திரைப்படத்தைப் பார்த்து ரசித்தேன். தாயகத்து இயற்கை அழகுடன் மிக அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.தமிழருடைய வாழ்வியலில் முதன்மைப்படுத்தப்படும் மதமும், மதம் சாராததுமான நம்பிக்கைகளும், விருப்பு வெறுப்புக்களும், தமிழ்மொழி சார்ந்தும் பல விடயங்கள் மனதைக் கொள்ளை கொள்ளும் அழகான காட்சிகளாக, மனதைவிட்டு நீங்க மறுக்கிறது.

புலம்பெயர் நாடுகளிலுள்ள ஈழத் தழிழராய் நம் வாழ்வியலும், தாயகத்தமிழராய் மண்மணத்துடனான பண்பாட்டு விழுமியங்களும் சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது . நாம் அனைவரும் பார்த்து ரசிக்கக் கூடிய திரைப்படம் இது .

தனிப்பட்ட ஒருவரின் தேவைகளும் அதற்கான தேடல்களும், தவறானதாக வழிப்படுத்தப்படும்போது, அல்லது தெரிவு செய்யப்படும்போது, தனிநபரோடு,பல குடும்பங்களையும் பாதிப்பதோடு, அச்சமூகத்தில் தனிநபருக்கான இடத்தை அல்லது தரத்தைத் தக்க வைப்பதிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது மிகவும் அழகாக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது

விழிப்புணர்வு , காதலுணர்வு, நகைச்சுவை, சண்டை , மகிழ்ச்சி , கலாச்சார பண்பாட்டு மாற்றங்கள், தமிழிலக்கியச் சிறப்பு என்று அத்தனை விடயங்களும் உள்ளடக்கப்பட்டு , மிக அழகாகத் தொகுக்கப்பட்ட (editing)படைப்பாக இதை நான் பார்க்கிறேன். குறிப்பாக நகைச்சுவையுணர்வுக்கு இலக்கியத்தைத் தொட்டது என்னை மிகவும் கவர்ந்தது.

மேலும் கதைக்கருவிற்கான இசைத் தெரிவும் அருமை.நடனத்தின் பாடல் (பதம் என்று நினைக்கின்றேன்)மிக அருமையான தெரிவு.

குறிப்பாகத் தாயகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட அத்தனை விடயங்களும் மிகவும் ரசிக்கக் கூடியவை .பூசாரி தொடக்கம் குடிகாரன் வரை அத்தனை நடிகர்களும் மிகச் சிறப்பாக நடித்திருந்தாலும், குடிகாரனின் நடிப்பும், பாத்திரப் பொருத்தமும் இன்னுமொருபடி மேலேயே இருந்தது.

சண்டைக் காட்சிகூட அளவாகவும், மிகைப்படுத்தலில்லாமலும், நம்பகத்தன்மையதாகவும், பொருத்தமான இடத்தெரிவாகவும் இருந்தமை குறிப்பிடப் படவேண்டியது . இருவருமே மிகச் சிறப்பாக நடித்திருந்தனர். இருவரில் யார் வல்லவர் என்பது முதலே தெரியாமல் இருந்திருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும் என்பது எனது தனிப்பட்ட ரசனை சார்ந்த கருத்து. Flashback காட்சியால் அது சாத்தியமாகாமல் போயிருக்கலாம். இருப்பினும் இந்தியத் திரைப்பட.ம் போன்று ,ரசிக்கக் கூடியதான ஒலியூட்டலோடு சண்டைக் காட்சி அமைந்திருந்தது.

இத்திரைப்படத்தில் திருமலை பிரணவனுக்கு கணிசமான இடம் இருந்தது அவருக்கான பாத்திரப் பொருத்தம் மிக நன்றாக இருந்தது .ஆர்வமுள்ள சிறந்த நடிகர். அவருடைய மனைவியாகவும், மனைவியின் நண்பியும் நன்றாகவே நடித்திருந்தனர். அத்தனை நடிகர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கும் நன்றியும் பற்பல.

எல்லாப் படைப்புகளுக்கும் குறைந்த பட்சம் ஒரு செய்தியும், அதற்கான தீர்வு அல்லது ஆலோசனை உள்ளடக்கமாக இருக்கும். அதனை நாசூக்காகவோ, வெளிப்படையாகவோ அடையாளப்படுத்துவதில்தான் ஒரு படைப்பாளி கலைஞன் ஆகிறான். மீதியை உங்களிடமே விட்டு விடுகிறேன்.

பாடினி இசையகத்திலிருந்து
அன்புடன், சித்திராங்கி

Leave a Reply