சிறையில் எனக்கு ஏதாவது நடந்தால், அதற்கு ராணுவ தளபதி அசிம் முனீர்தான் பொறுப்பு - இம்ரான் கான்
2023ஆம் ஆண்டில் இருந்து சிறையில் இருக்கும் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) கட்சித் தலைவர் இம்ரான் கான் சிறையில் உள்ளார். பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு வழக்கில் விடுதலை பெற்றாலும் மற்றொரு வழக்கில் கைது என்ற அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரை விடுவிக்கும் வகையில் பிடிஐ கட்சி தொண்டர்கள் பாகிஸ்தான் பிரதமர் மற்றும் ராணுவ தளபதி அசிம் முனீருக்கு எதிராக ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் மிகப்பெரிய இயக்கத்தை தொடங்க இருக்கிறார்கள்.
இந்த நிலையில் சிறையில் இருக்கும் எனக்கு ஏதாவது நடந்தால் அதற்கு ராணுவ தளபதி அசிம் முனீர்தான் பொறுப்பு என இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இம்ரான் கான் தெரிவித்திருப்பதாவது:-
சமீப நாட்களாக நான் சிறையில் மோசமான நடவடிக்கையை மிகத் தீவிரமாக எதிர்கொண்டு வருகிறேன். எனது மனைவி புஷ்ரா பிபியும் அதேபோன்ற நடவடிக்கையை எதிர்கொண்டு வருகிறார். அவருடைய அறையில் டி.வி. கூட ஆஃப் செய்யப்பட்டுள்ளது. சிறைக் கைதிகளுக்கான அடிப்படை உரிமைகள் கூட இருவருக்கும் மறுக்கப்பட்டுள்ளது.
எனது கட்சிக்கு தெளிவான தகவலை கொடுத்துள்ளேன். சிறையில் எனக்கு ஏதாவது நடந்தால், அதற்கு அசிம் முனீர்தான் பொறுப்பு ஏற்க வேண்டும். எனது வாழ்நாள் முழுவதையும் சிறையில் கழிக்க தயாராகிவிட்டேன். ஆனால் கொடுங்கோன்மை மற்றும் அடக்குமுறைக்கு முன் தலைவணங்குவது என்ற கேள்விக்கே இடமில்லை. எந்த சூழ்நிலையிலும் இந்த அடக்குமுறை அமைப்புக்கு ஒருபோதும் அடிபணிய வேண்டாம் என்பதுதான் பாகிஸ்தான் மக்களுக்கான எனது செய்தி.
இவ்வாறு இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.






















