மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தற்காலிக ஊழியர்கள் போராட்டம்
இலங்கை
மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபை அலுவலகத்தினை முற்றுகையிட்டு வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தற்காலிக நிலைய ஊழியர்கள் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
கடந்த 10வருடத்திற்கும் மேலாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் வீதி சீரமைப்பு ஊழியர்களாக பணியாற்றும் தற்காலிக நிலை ஊழியர்களே இந்த போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் தங்களை இணைத்துக்கொள்ளும்போது எந்த கல்வித்தகமையும் கோராத நிலையில் இன்று கல்வி பொது தராதர சாதாரண தரம் கற்றிருந்தால் மட்டுமே தமது தொழில் நிரந்தர நியமனத்திற்குள் உள்வாங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட தலைமைக்காரியாலயத்தில் கல்வி பொது தராதர சாதாரண தரம் உள்ள வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தற்காலிக கடமையாற்றும் ஊழியர்களுக்கான நேர்முகதேர்வு நடைபெற்றுவரும் நிலையிலேயே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வீதிகளில் நெருப்பு வெயிலுக்கும் மத்தியிலும் மழைகாலத்திலும் கடுமையான பணிகளை முன்னெடுத்துவரும் தமக்கான நிரந்தர நியமனத்தினை வழங்குவதற்கு கல்வி சான்றிதழ் என்ற விடயத்தினைக்கொண்டுவந்து தமது உரிமையினை பறிக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது ஊழியர்களினால் குற்றஞ்சாட்டப்பட்டது.
கல்வித்தரம் கோரப்படாத நிலையில் தாங்கள் தற்காலிக நிலையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குள் உள்வாங்கப்பட்டு 10வருடத்திற்கு மேலாக பணியாற்றிய நிலையில் இன்று கல்விச்சான்றிதழ் கொண்டுவாருங்கள் நிரந்தர நியமனம் தருகின்றோம் என்று கூறுவதானது எங்களது வாழ்க்கையினை கேள்விக்குறியாக்கும் செயற்பாடு எனவும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, 30,000 ரூபா சம்பளமே மாதந்தம் பெற்றுவருவதாகவும் பொருளாதார நெருக்கடி நேரத்திலும் தாங்கள் பல கஷ்டங்களுக்கு மத்தியிலேயே குடும்பத்தினை நடாத்திவரும் நிலையில் விடுமுறையும் இல்லாமல் கடமையாற்றிக்கொண்டிருக்கும் நிலையிலும் தமக்கான நிரந்தர நியமனத்தினை வழங்குவதற்கு பின்னடிக்கும் செயற்பாடுகளை கைவிட்டு அனைவரையும் நிரந்தர நியமனத்திற்குள் உள்ளீர்ப்பதற்கான செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் எனவும் ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகைதந்த வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் உயர் அதிகாரிகள் ஊழியர்களின் இந்த கோரிக்கை தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் மற்றும் அமைச்சின் கவனத்திற்கு கொண்டுசெல்வதாக தெரிவித்தனர்.























