• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பறவையே எங்கு இருக்கிறாய்! நா.முத்துக்குமாரின் 50-வது பிறந்தநாள்

சினிமா

தமிழ் திரையுலகில் ஒரு ஆகச்சிறந்த பாடலாசிரியர் மற்றும் கவிஞராக இருந்தவர் நா. முத்துகுமார். இவர் பெரும் ஞானம் உடைய கவிதைகளை மிகவும் எளிமையான தமிழ் சொற்களில் பாடலாக எழுதும் திறம் பெற்றவர்.

சீமான் இயக்கிய வீர நடை என்ற திரைப்படத்தில் முதன்முதலாக பாடலாசிரியராக களமிறங்கினார்.பாடலாசிரியர் ஆவதற்கு முன் இயக்குநர் பாலு மகேந்திராவிடம் நான்கு ஆண்டுகள் உதவி இயக்குநராக பணியாற்றினார். அங்குதான் இயக்குநர்களான வெற்றிமாறன் மற்றும் ராம் அவர்களின் நட்பு இவருக்கு கிடைத்தது. அதனை தொடர்ந்து பல திரைப்படங்களுக்கு பாடலாசிரியராக இருந்துள்ளார். தமிழில் 1500-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு வரிகள் எழுதியுள்ளார்.

குறிப்பாக யுவன் ஷங்கர் ராஜா மற்றும் நா முத்துகுமார் காம்போவில் வெளியான பாடல்கள் எவர்கிரீன் ஹிட்ஸ் என்றுதான் சொல்லவேண்டும். இந்த கூட்டணியில் மட்டும் 400-க்கும் மேற்பட்ட பாடல்கள் உருவாகியுள்ளது. நந்தா படத்தில் முதன்முறையாக முத்துகுமார் யுவன் இசைக்கு பாடல் வரிகளை எழுதினார்.

யுவன் இசையில் உருவான ஒரு நாளில், என் காதல் சொல்ல, , நினைத்து நினைத்து பார்த்தேன், தேவதையை கண்டேன், ஒரு கல் ஒரு கண்ணாடி, பறவையே எங்கு இருக்கிறாய் போன்ற பல வெற்றி பாடல்களுக்கு நா.முத்துகுமார் வரிகளை எழுதியுள்ளார். கடைசியாக யுவன் இசையில் தரமணி படத்திற்கு பாடல்களை எழுதினார்.

செல்வராகவன் இயக்கத்தில் யுவன் இசையமைத்த காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி மற்றும் புதுப்பேட்டை படங்களில் நா.முத்துகுமார் வரிகளில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட்டானது.

இயக்குநர் ராம் இயக்கிய அனைத்து திரைப்படங்களுக்கும் நா. முத்துகுமார் பாடல் எழுதியுள்ளார்.

குறிப்பாக இன்றும் கற்றது தமிழ், தங்க மீன்கள் பாடல்கள் வலம் வந்துக்கொண்டுதான் இருக்கிறது. இன்று நா. முத்துகுமாரின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரை நினைவு கூர்ந்து அவரது பாடல் வரிகளை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

எதிர்பாராத விதமாக 2016 ஆம் ஆண்டில் மஞ்சள்காமாலை நோயினால் முத்துகுமார் காலமானார். தமிழ் திரையுலகில் அவர் விட்டுச்சென்ற இடத்தை இன்னும் யாராலும் நிரப்பமுடியவில்லை.

கவிஞர் நா.முத்துக்குமாரின் 50வது பிறந்தநாளையொட்டி, வரும் ஜூலை 19ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் ‛ஆனந்த யாழை' என்ற தலைப்பில் மாபெரும் இசைக்கச்சேரி நடக்க உள்ளது. அதில் முத்துக்குமாருடன் பணியாற்றிய யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ், ஹாரிஸ் ஜெயராஜ், சந்தோஷ் நாராயணன், தமன், விஜய்ஆண்டனி, கார்த்திக்ராஜா, நிவாஸ் கே பிரசன்னா உள்ளிட்ட பல இசைமைப்பாளர்கள் இசை விருந்து கொடுக்கிறார்கள். தமிழ் சினிமா சரித்திரத்தில் இப்படி பல இசையமைப்பாளர்கள் ஒன்றிணைவது இதுவே முதன்முறையாகும்.

நா.முத்துகுமார் மக்களை விட்டு பிரிந்தாலும், அவருடைய வரிகள் இன்னும் மக்களை வழிநடத்தி கொண்டிருக்கிறது. பல துவண்டுப்போன மனிதர்களுக்கு ஒரு உத்வேகத்தை அளிக்கிறது தனிமையில் வாடும் மனிதர்களுக்கு சக தோழனாய் அவர் பயணித்துக் கொண்டிருக்கிறார்..
 

Leave a Reply